இந்தியா

ஆந்திர கோவில்களில் முடிக்காணிக்கை கட்டணம் ரூ.40 ஆக உயர்வு

Published On 2023-03-17 05:37 GMT   |   Update On 2023-03-17 05:37 GMT
  • இந்து சமய அறநிலையத்துறையில் பணியாற்றும் நிரந்தர முடித்திருத்தும் தொழிலாளர்களுக்கு அதிக அளவில் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது.
  • திருப்பதி ஏழுமலையான் கோவிலிலும் முடி காணிக்கைக்கு கட்டணம் வசூலிக்கப்படுமா என பக்தர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

திருப்பதி:

ஆந்திரா மாநில இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 610 கோவில்களில் முடி காணிக்கை செலுத்த வரும் பக்தர்களிடம் ரூ.25 கட்டணமாக வசூலிக்கப்பட்டு வருகிறது.

இந்து சமய அறநிலையத்துறையில் பணியாற்றும் நிரந்தர முடித்திருத்தும் தொழிலாளர்களுக்கு அதிக அளவில் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. நிரந்தர ஊழியர்களுக்கு வழங்குவதைப் போல் ஒப்பந்த ஊழியர்களுக்கும் ஊதியம் உயர்த்தி தர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.

அதன் அடிப்படையில் ஒப்பந்த ஊழியர்களும் மாதம் ரூ.20,000 வரை சம்பளம் பெறும் வகையில் முடி காணிக்கை கட்டணம் ரூ.25 ல் இருந்து 40 ரூபாயாக உயர்த்தி இந்து சமய அறநிலையத்துறை தலைமை செயலாளர் ஹரி ஜவஹர்லால் உத்தரவு பிறப்பித்து உள்ளார். முடி காணிக்கை மற்றும் முடி விற்பனை மூலம் கிடைக்கும் வருவாயை கோவிலில் வேலை செய்யும் பூசாரிகள் மற்றும் முடி காணிக்கை செலுத்துபவர்களுக்கு பிரித்து வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களுக்கு இலவசமாக மொட்டை அடிக்கப்படுகிறது. இந்து சமய அறநிலையத்துறை சார்பில் முடி காணிக்கைக்கு கட்டணம் வசூலிப்பது போல் திருப்பதி ஏழுமலையான் கோவிலிலும் கட்டணம் வசூலிக்கப்படுமா என பக்தர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News