இந்தியா

குவாலியரை 'கிறுகிறுக்க' வைத்த இளம்பெண்: மதுபோதையில் கார் மீது ஏறி ஆட்டம்

Published On 2023-04-02 08:31 IST   |   Update On 2023-04-02 08:31:00 IST
  • அரைமணி நேர ‘நாடகம்’ முடிவுக்கு வந்தது.
  • அப்பெண்ணை விசாரணைக்காக போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

குவாலியர் :

விறுவிறு போக்குவரத்து நேரத்தில் இளம்பெண் ஒருவரின் அட்டகாசத்தால் வாகன ஓட்டிகள் திண்டாடிப் போயினர்.

மத்தியபிரதேச மாநிலத்தின் குவாலியர் நகரில் இந்த 'அதிரடி' அரங்கேறியது.

அந்த நகரில் உள்ள பரபரப்பான நாற்சந்தி, பூல் பாக்.

இங்கு வழக்கம்போல் வாகனங்கள் பறந்துகொண்டிருந்தன. அப்போது தள்ளாடியபடி சாலையின் குறுக்கே வந்த ஒரு இளம்பெண், ஒரு முதிய வாகன ஓட்டியின் இரு சக்கர வாகனத்தை வலுக்கட்டாயமாக பறித்தார். பின்னர் அதில் ஏறி அமர்ந்தார். அதை அப்படியும் இப்படியுமாக ஓட்டினார். பின்னர் அதை கைவிட்டு, சாலைத்தடுப்பு ஒன்றை தள்ளிவிட்டார்.

அடுத்து, ஓடும் ஒரு காரின் முன்பகுதியில் ஏறி அமர்ந்தார். எழுந்து நின்று நடனமாடினார். அந்த காரின் டிரைவர், செய்வதறியாமல் திகைத்தபடி இருக்கையிலேயே அமர்ந்திருந்தார்.

இளம்பெண்ணின் இந்த அதிரடியால் அங்கு போக்குவரத்து ஸ்தம்பித்தது. எல்லோரும் அந்தப் பெண்ணின் அடாவடியை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தனர். முன்வந்து கண்டித்த சிலர் மீதோ அவர் வசைமாரி பொழிந்தார்.

ஆனாலும் சில பெண்கள், அந்த இளம்பெண்ணை போராடி சமாதானப்படுத்தி காரில் இருந்து இறக்கினர்.

பின்னர் அவரை சாலையோரம் அழைத்துச் செல்ல, அரைமணி நேர 'நாடகம்' முடிவுக்கு வந்தது.

சிலர் போலீசாருக்கு தகவல் சொல்ல, விரைந்து வந்த அவர்கள், அப்பெண்ணை விசாரணைக்காக போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

அந்தப் பெண் மதுபோதையில் இருந்ததாகவும், காதல் தோல்வி விரக்தியில் இவ்வாறு நடந்ததாகவும் கூறப்படுகிறது. அவரின் ஏறுக்குமாறான செயல்களை சிலர் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் இட, அது பரபரப்பாக பரவியுள்ளது.

Similar News