கர்நாடகாவில் முகமூடி அணிந்து துப்பாக்கி முனையில் நகை கடையில் கொள்ளை
- கடைக்கு 4 பேர் கொண்ட கும்பல் முகமூடி அணிந்தபடி வந்தனர்.
- சம்பவ இடத்துக்கு போலீஸ் துப்பறியும் மோப்பநாய், மற்றும் கைரேகை மற்றும் தடயவியல் நிபுணர்களும் விரைந்து வந்து ஆய்வு செய்தனர்.
பெங்களூரு:
கர்நாடக மாநிலம் கலபுரகி சரப்பஜார் பகுதியில் ஜெய்பவானி என்ற வணிக வளாகம் உள்ளது. இதன் முதல் தளத்தில் ஒரு நகை கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடைக்கு மதியம் 12 மணியளவில் 4 பேர் கொண்ட கும்பல் முகமூடி அணிந்தப்படி வந்தனர்.
பின்னர் அவர்கள் திடீரென நகை கடை உரிமையாளரின் தலையில் துப்பாக்கியை வைத்து மிரட்டி கடையில் இருந்து சுமார் 3 கிலோ தங்கத்தை கொள்ளையடித்து கொண்டு தப்பினர். இதையடுத்து கடையின் உரிமையாளர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
அதன்அடிப்படையில் மாநகர போலீஸ் கமிஷனர் ஷரணப்பா மற்றும் போலீசார் கொள்ளை நடந்த நகை கடைக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது கொள்ளையர்கள் மதியம் 12 மணி முதல் 12.45 மணிவரை கடையில் இருந்தது தெரியவந்தது.
மேலும் அங்கிருந்து கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது கொள்ளையர்கள் முகமூடி அணிந்து இருந்தது தெரியவந்தது. இதனால் அவர்களின் உருவம் கண்டுபிடிக்க முடியவில்லை. மேலும் கடையில் 1300 கிராம் தங்க நகைகள் மட்டுமே இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு போலீஸ் துப்பறியும் மோப்பநாய், மற்றும் கைரேகை மற்றும் தடயவியல் நிபுணர்களும் விரைந்து வந்து ஆய்வு செய்தனர். பட்டப்பகலில் நகை கடையில் துப்பாக்கி முனையில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த கொள்ளை சம்பவம் குறித்து பிரம்மபூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.