இந்தியா

வரலாற்றில் முதல்முறையாக கேரளாவில் அரசு ஊழியர்களுக்கு தவணை முறையில் சம்பளம்

Published On 2024-03-05 05:12 GMT   |   Update On 2024-03-05 05:12 GMT
  • மாநிலத்தில் உள்ள 5.25 லட்சம் அரசு ஊழியர்களுக்கு ஊதியமாக மாதந்தோறும் மொத்தம் ரூ3,330 கோடி வழங்கப்படுகிறது.
  • நேற்று 97 ஆயிரம் பேருக்கு மட்டுமே சம்பளம் வழங்கப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம்:

கேரளாவில் ஒவ்வொரு மாதமும் முதல் 2 தினங்களுக்குள் அரசு ஊழியர்களுக்கு மாத ஊதியம் வழங்கப்படும். மாநிலத்தில் உள்ள 5.25 லட்சம் அரசு ஊழியர்களுக்கு ஊதியமாக மாதந்தோறும் மொத்தம் ரூ3,330 கோடி வழங்கப்படுகிறது.

இந்நிலையில் பிப்ரவரி மாத சம்பளம் மாத தொடக்கத்தில் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படவில்லை. இதனால் அரசு ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். சம்பளம் வழங்காததை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட போவதாக தலைமை செயலக ஊழியர்கள் அறிவித்தனர்.

இந்நிலையில் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க கேரள அரசு நடவடிக்கை எடுத்தது. அதன்படி வரலாற்றில் முதல் முறையாக தவணை முறையில் சம்பளம் வழங்கப்பட்டது. முதல் கட்டமாக ரூ.50 ஆயிரத்திற்கும் குறைவாக சம்பளம் உள்ளவர்களுக்கு முழுத் தொகையும் வழங்கப்பட்டுள்ளது.

அதேநேரம் கூடுதல் சம்பளம் பெறுபவர்களுக்கு முதல் கட்டமாக அதிக பட்சமாக ரூ.50 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. அதேநேரம் மீதமுள்ள தொகை எப்போது வழங்கப்படும் என்பது பற்றிய அறிவிப்பு எதுவும் இல்லை. நேற்று 97 ஆயிரம் பேருக்கு மட்டுமே சம்பளம் வழங்கப்பட்டுள்ளது.

இன்று ஆசிரியர்கள் உள்ளிட்டோருக்கு முதல் தவணை சம்பளம் வழங்கப்பட்டது. 3 அல்லது 4 நாட்களில் சம்பளப் பகிர்வு முடிக்கப்படும் என்று தெரிவித்த மாநில நிதி மந்திரி பாலகோபால், ஓய்வூதியம் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது என்றார்.

இதற்கிடையில் கரூவூலத்தில் உள்ள வைப்புத் தொகையை திரும்ப பெறுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

Tags:    

Similar News