இந்தியா

கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்.. ஆன்லைன் சூதாட்ட மோசடி வழக்கில் கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏவை கைது செய்த ED

Published On 2025-08-23 19:29 IST   |   Update On 2025-08-23 19:29:00 IST
  • சுமார் ரூ. 12 கோடி ரொக்கம், ரூ. 6 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் மற்றும் 10 கிலோ வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
  • மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தப்பட்டு விசாரணைக்காக காவலில் எடுக்கப்படுவார்

கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ கே.சி. வீரேந்திரா சட்டவிரோத ஆன்லைன் சூதாட்ட மோசடி குற்றச்சாட்டில் அமலாக்கத்துறையால் (ED) இன்று கைது செய்யப்பட்டார்.

முன்னதாக நாடு முழுவதும் வீரேந்திரா தொடர்பான 30 இடங்களில் அதிகாரிகள் ஒரே நேரத்தில் சோதனை நடத்தினர்.

சோதனைகளின் போது, சுமார் ரூ. 12 கோடி ரொக்கம், ரூ. 6 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் மற்றும் 10 கிலோ வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக ED அதிகாரிகள் தெரிவித்தனர். அதில் 1 கோடி ரூபாய் வெளிநாட்டு பணம் ஆகும். 

கூடுதலாக, நான்கு விலையுயர்ந்த வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன, மேலும் வீரேந்திராவின் 17 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன.

வீரேந்திராவின் சகோதரர் கே.சி. திப்பேசாமி மற்றும் மகன் பிருத்வி என் ராஜ் ஆகியோர் துபாயில் இருந்து ஆன்லைன் கேமிங் நடவடிக்கைகளை நடத்தி வருவதாகவும், வீரேந்திரா, கிங்567, ராஜா567, ரத்னா கேமிங் போன்ற பல ஆன்லைன் பெட்டிங் வலைத்தளங்களை நடத்தி வருவதாகவும் ED வட்டாரங்கள் தெரிவித்தன.

இதற்கிடையே வீரேந்திரா, சிக்கிம் மாநிலம் கேங்டாக்கில் கேசினோ அமைப்பதற்காக நிலத்தை குத்தகைக்கு எடுக்க அங்கு சென்றிருந்த அவரை கைது செய்ததாக ED தெரிவித்தது.

அவர் கேங்டாக்கில் உள்ள மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தப்பட்டு விசாரணைக்காக காவலில் எடுக்கப்படுவார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.  

Tags:    

Similar News