இந்தியா

ரெயில்வே பணிகளுக்கு நிலம் லஞ்சமாக பெற்ற வழக்கு- லாலு மனைவியிடம் சி.பி.ஐ. விசாரணை

Published On 2023-03-06 15:25 IST   |   Update On 2023-03-06 15:25:00 IST
  • கால்நடை தீவன ஊழல் வழக்கில் சிறை தண்டனை பெற்ற அவர் தற்போது உடல்நல பாதிப்பு காரணமாக டெல்லியில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் உள்ளார்.
  • லாலு பிரசாத் யாதவின் குடும்ப உறுப்பினர்கள் பெயரிலும், ஏ.கே. இன்போசிஸ்டம்ஸ் நிறுவனத்தின் பெயரிலும் நிலங்கள் லஞ்சமாக பெறப்பட்டது என்று குற்றம் சாட்டப்பட்டது.

பாட்னா:

பீகார் மாநில முன்னாள் முதல்-மந்திரி லாலு பிரசாத் யாதவ். மத்திய ரெயில்வே துறை மந்திரியாகவும் இருந்தவர்.

கால்நடை தீவன ஊழல் வழக்கில் சிறை தண்டனை பெற்ற அவர் தற்போது உடல்நல பாதிப்பு காரணமாக டெல்லியில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் உள்ளார்.

இதற்கிடையே ரெயில்வே பணிகளுக்கு நிலத்தை லஞ்சமாக பெற்றதாக லாலு பிரசாத் யாதவ் குடும்பத்தினர் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது. 2004-2009-ம் ஆண்டு கால கட்டத்தில் மும்பை, ஜபல்பூர், கொல்கத்தா, ஜெய்ப்பூர், ஹாஜிபூர் ஆகிய இடங்களில் பல்வேறு மண்டலங்களில் பீகாரின் பாட்னாவை சேர்ந்தவர்கள் பணிகளில் நியமிக்கப்பட்டனர்.

அதற்காக லாலு பிரசாத் யாதவின் குடும்ப உறுப்பினர்கள் பெயரிலும், ஏ.கே. இன்போசிஸ்டம்ஸ் நிறுவனத்தின் பெயரிலும் நிலங்கள் லஞ்சமாக பெறப்பட்டது என்று குற்றம் சாட்டப்பட்டது.

மாற்றுத்திறனாளிகளை நியமனம் செய்வதற்கு ரெயில்வே ஆணையம் வழங்கிய முறையான நடைமுறை மற்றும் வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பாக லாலுபிரசாத் யாதவ், அவரது மனைவி ராப்ரி தேவி, மகள்கள் மற்றும் நிலத்தை கொடுத்து வேலை பெற்றதாக 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்து சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. ஏற்கனவே குற்றப்பத்திரிகையை சி.பி.ஐ. கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளது.

பலரிடம் விசாரணை நடத்தப்பட்டு விவரங்கள் சேகரிக்கப்பட்டன. வழக்கு தொடர்பான ஆவணங்களையும் சி.பி.ஐ. அதிகாரிகள் சேகரித்து வந்தனர்.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் லாலு பிரசாத் யாதவின் உதவியாளரும், முன்னாள் சிறப்பு பணி அதிகாரியுமான போலா யாதவை சி.பி.ஐ. கைது செய்தது.

இதற்கிடையே சமீபத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் சில ஆவணங்களை டெல்லியில் உள்ள சி.பி.ஐ. நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தனர். இதையடுத்து கூடுதல் விசாரணை நடத்தப்போவதாக சி.பி.ஐ. தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில் இன்று பாட்னாவில் உள்ள லாலு பிரசாத் யாதவ் வீட்டுக்கு சி.பி.ஐ. அதிகாரிகள் சென்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து வீட்டுக்கு முன்பு பலத்த பாதுகாப்பு போடப்பட்டது.

12 பேர் கொண்ட அதிகாரிகள் குழு லாலு பிரசாத் யாதவின் மனைவியும், முன்னாள் முதல்-மந்திரியுமான ராப்ரிதேவியிடம் விசாரணை நடத்தினார்கள். அவரிடம் ரெயில்வே பணிகளுக்கு லஞ்சமாக நிலங்கள் வாங்கியது தொடர்பாக விசாரணை நடத்தினர்.

அப்போது வீட்டில் லாலு பிரசாத் யாதவின் மகன்களான தேஜஸ்வி யாதவ், தேஜ் பிரசாத் யாதவ் ஆகியோர் இருந்தனர் என்று கூறப்படுகிறது. தேஜஸ்வி யாதவ் பீகாரின் துணை முதல்வராகவும் ராஷ்டீரிய ஜனதாதளம் கட்சி தலைவராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

லாலு பிரசாத் யாதவ் வீட்டில் சோதனை நடத்தப்படவில்லை என்றும் ராப்ரி தேவியிடம் விசாரணை நடத்தப்பட்டு அவரது வாக்குமூலத்தை தான் பதிவு செய்ததாகவும் சி.பி.ஐ. வட்டாரங்கள் தெரிவித்தன.

ராப்ரிதேவியிடம் ஏற்கனவே தகவல் தெரிவித்து அவரை சந்திப்பதற்கான தேதி, நேரம் நிர்ணயிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த வழக்கு தொடர்பாக வருகிற 15-ந்தேதி ஆஜராகும்படி லாலு பிரசாத் யாதவ், அவரது குடும்பத்தினருக்கு சிறப்பு கோர்ட்டு சம்மன் அனுப்பி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News