போலி ஆவணங்கள் மூலம் பிறப்பு சான்றிதழ் பெற்ற 43 பேர் மீது வழக்குப்பதிவு
- 43 பிறப்பு சான்றிதழ்களும் ஜல்காவ் மாநகராட்சி சார்பில் வழங்கப்பட்டவை ஆகும்.
- அனைவரும் வங்கதேசத்தை சேர்ந்தவர்களா என்பது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மும்பை:
வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக வந்தவர்கள் மும்பை உள்பட பல பகுதிகளில் வசித்து வருகின்றனர். இவர்கள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் முறைகேடாக பிறப்பு சான்றிதழ் பெறுவதாக பா.ஜனதா முன்னாள் எம்.பி. கிரித் சோமையா குற்றம்சாட்டி இருந்தார்.
இவ்வாறு முறைகேடாக பெற்ற பிறப்பு சான்றிதழ்கள் மூலம் வங்கதேசத்தினர் இந்தியர்கள் என கூறி ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை போன்ற ஆவணங்களை பெற்று வருகின்றனர்.
இந்தநிலையில் ஜல்காவில் முறைகேடாக பிறப்பு சான்றிதழ் பெற்ற 43 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். 43 பிறப்பு சான்றிதழ்களும் ஜல்காவ் மாநகராட்சி சார்பில் வழங்கப்பட்டவை ஆகும். அந்த சான்றிதழ்கள் அனைத்தும் போலி ஆவணங்களை பயன்படுத்தி முறைகேடாக பெறப்பட்டதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இவர்கள் அனைவரும் வங்கதேசத்தை சேர்ந்தவர்களா என்பது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.