இந்தியா

பேருந்து விபத்தில் 45 பேர் பலி: அசாருதீன் தலைமையில் சவுதிக்கு குழுவை அனுப்பும் தெலுங்கானா அரசு

Published On 2025-11-17 18:51 IST   |   Update On 2025-11-17 18:51:00 IST
  • பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 45 பேர் கருகி உயிரிழந்தனர்.
  • உயிரிழந்தவர்களின் இறுதிச்சடங்கை சவுதியில் நடத்த ஏற்பாடு.

சவுதி அரேபியாவில் உள்ள புனித மெக்கா நகருக்கு முஸ்லிம்கள் ஹஜ் பயணம் மேற்கொள்வது 5 கடமைகளில் ஒன்றாகும். இஸ்லாமியர்களின் கடைசி மாதமான துல்-ஹஜ் மாதத்தில் இந்த புனித பயணம் மேற்கொள்வார்கள். மற்ற காலக்கட்டத்தில் சவுதி அரேபியா சென்று உம்ரா பயணம் செய்வார்கள்.

தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்தவர்கள் கடந்த 9-ந்தேதி சவுதி அரேபியாவுக்கு உம்ரா புனித பயணம் மேற்கொண்டனர். அவர்கள் மெக்காவில் தங்கள் உம்ரா பணிகளை முடித்து விட்டு மதீனாவுக்கு பஸ்சில் சென்று கொண்டு இருந்தனர்.

மதீனா அருகே உள்ள முப்ரிஹாத் என்ற இடத்தில் இந்திய நேரப்படி நள்ளிரவு 1.30 மணியளவில் பஸ் சென்று கொண்டு இருந்தபோது எதிர்பாராத விதமாக பஸ் மீது டீசல் டேங்கர் லாரி மோதியது. அதில் இருந்த யாத்ரிகர்கள் அனைவரும் தூங்கி கொண்டு இருந்த நிலையில் இந்த விபத்து ஏற்பட்டு பஸ் தீப்பிடித்து எரிந்தது.

இந்த கோர விபத்தில் பஸ்சில் இருந்த 20 பெண்கள், 11 சிறுவர்கள் உள்பட 45 பேர் பலியானார்கள். பஸ் முழுவதும் தீப்பற்றி எரிந்ததால் அவர்கள் உடல் கருகி இறந்தனர். பலியானவர்களில் பெரும்பாலானோர் ஐதராபாத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

இந்த கோர விபத்து பற்றி அறிந்ததும் மீட்பு குழு உடனடியாக சம்பவம் நடந்த பகுதிக்கு விரைந்தது. மீட்பு குழு சம்பவ இடத்தை அடைவதற்குள் பஸ் முழுவதும் எரிந்து நாசமானதாகவும், உடல்களை அடையாளம் காண்பது கடினம் என்றும் சவுதி மீட்பு படையை சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் ஒருவர் மட்டுமே மீட்கப்பட்டு உள்ளார். அவர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக மீட்பு குழுவினர் தெரிவித்தனர். அவரது நிலைமையும் கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த விபத்து தொடர்பாக சவுதி அரேபியாவில் உள்ள இந்திய தூதரகம் உதவி எண்களை அறிவித்து உள்ளது. விபத்து குறித்த தகவல் அறிவதற்கு, 8002440003 (கட்டணமில்லா தொலைபேசி எண்), 0096 6122614093, 00966126614276 00966556122301 (வாட்ஸ் அப்) எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அங்குள்ள இந்திய தூதரக அதிகாரிகள் விபத்து தொடர்பான விவரங்களை கேட்டு அறிந்துள்ளனர்.

இந்த நிலையில் நிவாரண பணிக்காக தெலுங்கானா அரசு சவுதி அரேபியாவுக்கு குழு ஒன்றை அனுப்பி வைக்க இருக்கிறது. சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முகமது அசாருதீன் தலைமையில் இந்த குழு செல்கிறது. சவுதி அரேபியாவில் உயிரிழந்தவர்கள் மதத்தின்படி இறுதிச் சடங்கை நடத்தவும் தெலுங்கானா அரசு முடிவு செய்துள்ளது. அத்துடன் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 5 லட்சம் ரூபாய் வழங்கவும் முடிவு செய்துள்ளது.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் இருந்து தலா இரண்டு பேரை அழைத்துச் செல்லவும் முடிவு செய்துள்ளது. அசாருதீன் உடன் ஒவைசி கட்சியை சேர்ந்த ஒரு எம்.எல்.ஏ. மற்றும் மைனாரிட்டி நலத்துறை அதிகாரிகளும் செல்ல இருக்கிறார்கள்.

Tags:    

Similar News