கால்வாயில் மூழ்கிய இளம்பெண்ணை காப்பாற்றிய ராணுவ வீரர்: வைரலாகும் வீடியோ
- ஒரு ராணுவ வீரர் நிச்சயமாக கடமையில் இருந்து விலகுவதில்லை என பாராட்டு
- ரியல் லைஃப் சூப்பர்மேன், எங்கள் இந்திய ராணுவ ஜவான் என டுவிட்டரில் பாராட்டு
இந்தியாவின் பஞ்சாப் மாநில தென்கிழக்கில் உள்ளது பாட்டியாலா நகரம். இங்கு பிரபலமான பக்ரா கால்வாய் நீர்ப்பாசனத்திற்கு பெருமளவில் உதவுகிறது. இந்த கால்வாயில் ஒரு இளம் பெண்ணை மூழ்கும் ஆபத்திலிருந்து ராணுவ வீரர் ஒருவர் காப்பாற்றியுள்ளார். இணையத்தில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோ அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.
இந்த வீரமிகு சம்பவத்தை காட்சிப்படுத்தும் வீடியோவை ராணுவத்தின் மக்கள் தொடர்பு அதிகாரி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
அதில் "ஆர்ப்பரித்து பெருக்கெடுத்தோடும் பக்ரா கால்வாயில், வீரர் டி.என். கிருஷ்ணன் குதித்து ஒரு மூழ்கும் இளம் பெண்ணை காப்பாற்றுகிறார். அவரின் அழிக்க முடியாத மன உறுதிக்கு பாராட்டுக்கள். எப்பொழுதும் நாங்கள் நாட்டின் சேவைக்காக இருக்கிறோம்'' எனக் குறிப்பிட்டுள்ளார்.
வைரலான இந்த காட்சியை கண்ட நெட்டிசன்கள் அந்த ராணுவ அதிகாரிக்கு வணக்கம் செலுத்தி பாராட்டி வருகின்றனர்.
ஒரு பயனர், "ஒரு ராணுவ வீரர் நிச்சயமாக கடமையில் இருந்து விலகுவதில்லை. வரவிருக்கும் வீரர்களுக்கு ஒரு நல்ல முன்னுதாரணத்தை விட்டுச் செல்கிறார்" என கூறியிருக்கிறார்.
மற்றொரு பயனர், டி.என். கிருஷ்ணனை கற்பனை கதாபாத்திரமான சூப்பர்மேனுடன் ஒப்பிட்டு, "ரியல் லைஃப் சூப்பர்மேன், எங்கள் இந்திய ராணுவ ஜவான்" என்று எழுதியிருக்கிறார்.
இந்திய ராணுவம் தனது குடிமக்களை பாதுகாப்பதில் இருந்து எந்தப் பேரிடர்களின் போதும் முன்னணியில் இருந்த போதோ அல்லது மக்களைக் காப்பாற்றும் போதோ ஒருபோதும் பின்வாங்கியதில்லை என்பது மீண்டும் புலனாகியுள்ளது.