இந்தியா

வாரணாசி ஞானவாபி மசூதியில் அகழாய்வு நடத்த அலகாபாத் உயர் நீதிமன்றம் அனுமதி

Published On 2023-08-03 10:37 IST   |   Update On 2023-08-03 10:37:00 IST
  • ஆய்வுக்கு தடைவிதித்த உச்சநீதிமன்றம் அலகாபாத் உயர்நீதிமன்றத்தை அணுக உத்தரவு
  • அலகாபாத் உயர் நீதிமன்றம் கீழமை நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்துள்ளது

இந்திய அகழாய்வுத்துறை கடந்த மாதம் 24-ம் தேதி அகழாய்வு பணியை தொடங்கியதும் உச்ச நீதிமன்றம் தடைவிதித்து, மசூதி கமிட்டியை உயர் நீதிமன்றத்தை அணுக கூறியது. மசூதி கமிட்டி மனு மீது கடந்த மாதம் இரண்டு நாட்கள் விசாரணை நடைபெற்று தீர்ப்பு இன்றைய தேதிக்கு ஒத்திவைத்தது நீதிமன்றம்.

அதன்படி இன்று காலை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அப்போது கீழமை நீதிமன்றம் தீர்ப்பை உறுதி செய்தது. இதன்மூலம் ஞானவாபி மசூதியில் அகழாய்வு நடத்த அலகாபாத் உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

முன்னதாக,

உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் காசி விசுவநாதர் கோயிலுக்கு அருகே ஞானவாபி மசூதி இருக்கிறது. அந்த மசூதி கோயிலை இடித்துக் கட்டப்பட்டிருப்பதாகவும், அதை மீண்டும் இந்துக்களிடம் வழிபாட்டுக்காக ஒப்படைக்க வேண்டும் என்றும் வாரணாசி நீதிமன்றத்தில் சில பெண்களால் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த கீழமை நீதிமன்றம், அந்தப் பகுதியில் ஆய்வு செய்வதற்கு உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த 24-ந்தேதி தொல்லியல்துறை ஆய்வை தொடங்கியது. இதை எதிர்த்து மசூதி நிர்வாகம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. உச்சநீதிமன்றம் ஆய்வுக்கு தடைவிதித்தது. மேலும், இதுதொடர்பாக அலகாபாத் உயர்நீதிமன்றத்தை அணுக கேட்டுக்கொண்டது.

இதனால் மசூதி சார்பில் அலகாபாத்தில் ஆய்வுக்கு தடைவிதிக்கக்கோரி மனுதாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணை கடந்த மாதம் 26 மற்றும் 27-ந்தேதி ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்றது. விசாரணை முடிந்த நிலையில் ஆகஸ்ட் 3-ந்தேதி (இன்று) தீர்ப்பு வழங்கப்படும் என நீதிமன்றம் எனத் தெரிவித்தது. அதன்படி இன்று அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

கடந்த 2021-ம் ஆண்டு சில பெண்கள் ஞானவாபி மசூதிக்குள் உள்ள இந்து தெய்வங்களை வழிபட அனைத்து நாட்களும் அனுமதிக்க வேண்டும் என வாரணாசி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதில் இருந்து இந்த விவகாரம் இந்திய அளவில் பேசும்பொருளாகியுள்ளது.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நீதிமன்றம் ஞானவாபி மசூதி வளாகத்தில் வீடியோ மூலம் ஆய்வு செய்ய உத்தரவிட்டது. அப்போது அங்கு சிவலிங்கம் காணப்பட்டதாக மனுதாரர்கள் தெரிவித்தனர்.

ஆனால் மசூதி நிர்வாகம் அவர்கள் கூறும் பகுதி ஒரு நீரூற்று பகுதி. மசூதியில் தொழுகை நடத்த வருபவர்கள், கை கால் கழுவதற்கான தொட்டியில் நீர் நிரப்பப்பட்டுள்ளது எனக் கூறினார். ஆனால், இந்த பிரச்சனை உணர்திறனை மனதில் வைத்து உச்சநீதிமன்றம் அந்த இடத்தை சீல்வைக்க அதே மாதம் உத்தரவிட்டது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், இந்து பெண்கள் வழிபாடு செய்ய வேண்டுகோள் விடுத்த நிலையில், தங்களால் அதை பராமரிக்க முடியாது என மசூதி சார்பில் தெரிவித்த தகவலை வாரணாசி நீதிமன்றம் ஏற்க மறுத்தது. இதை அலகாபாத் உயர்நீதிமன்றம் கடந்த மே மாதம் உறுதி செய்தது.

Tags:    

Similar News