இந்தியா

பெண் உடை அணிந்து தூக்கில் தொங்கிய விமான ஆணைய அதிகாரி

Published On 2024-06-25 10:42 IST   |   Update On 2024-06-25 10:42:00 IST
  • அதிகாரியின் உடலிலும் எந்தவிதமான தாக்குதலுக்கான அறிகுறிகளும் இல்லை என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
  • அதிகாரி பெண் உடை அணிந்து இருந்தது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

டேராடூன்:

உத்தரகாண்ட் மாநிலத்தின் டேராடூனில் உள்ள விமான நிலைய ஆணையத்தில் மூத்த அதிகாரியாக ஒருவர் பணியாற்றி வருகிறார்.

இவர் அப்பகுதியில் விமான நிலைய அதிகாரிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள விடுதியில் வசித்து வந்தார்.

இவரது வீடு வெகுநேரமாக பூட்டி கிடந்தது. இதனால் சந்தேகம் அடைந்த சக ஊழியர்கள் கதவை தட்டியும் திறக்கப்படவில்லை. இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது அங்கு அதிகாரி மின் விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்தார்.

அவர் பெண்களுக்கான மேக்ஸி உடை, உள்ளாடைகள், லிப்ஸ்டிக், வளையல்கள் உள்ளிட்டவற்றை அணிந்திருந்தார். உடனடியாக அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

அதிகாரி தூக்கில் தொங்கிய அறையின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. அந்த அறைக்குள் யாரும் அத்து மீறி நுழைந்ததற்கான அறிகுறிகளோ, அந்த அதிகாரியின் உடலிலும் எந்தவிதமான தாக்குதலுக்கான அறிகுறிகளும் இல்லை என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதே நேரம் அந்த அதிகாரி பெண் உடை அணிந்து இருந்தது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

அந்த அதிகாரியின் மனைவி ஆசிரியை ஆவார். சம்பவம் நடந்த போது அவர் பித்தோராகரில் இருந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு அவருடன் உறவினர்கள் மற்றும் சக ஊழியர்கள் என 3 பேர் வெளியே சென்று சாப்பிட்டு விட்டு குடியிருப்புக்கு திரும்பி உள்ளனர். அதன் பிறகு அந்த அதிகாரி தனது அறைக்கு சென்றுள்ளார்.

இந்த நிலையில் தான் அவருக்கு சக ஊழியர்கள் போன் செய்த போது அவர் அழைப்பை ஏற்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த ஊழியர்கள் போலீசாருக்கு போன் செய்த பிறகு தான் அவர் வீட்டில் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

சம்பவ இடத்திற்கு சைபர் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ஆய்வு நடத்தப்பட்டு வருவதாகவும், அவரது செல்போனுக்கு வந்த அழைப்புகளை பட்டியல் சேகரித்து விசாரணை நடந்து வருவதாகவும் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே அதிகாரியின் மரணத்திற்கான உண்மை காரணம் தெரிய வரும் என்று போலீஸ் சூப்பிரண்டு மனோஜ் கத்யால் தெரிவித்தார்.

Tags:    

Similar News