சூடானில் இருந்து மீட்கப்பட்ட 246 இந்தியர்கள் மும்பை வந்தடைந்தனர்
- சூடானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் பணிகளில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது.
- சூடானில் இருந்து மீட்கப்பட்ட 246 இந்தியர்கள் பத்திரமாக இன்று தாயகம் திரும்பினர்.
உள்நாட்டு போர் நடைபெற்று வரும் சூடானில் இருந்து மீட்கப்பட்ட 246 இந்தியர்கள் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகருக்கு அழைத்துவரப்பட்டனர். ஜெட்டாவில் இருந்து 246 இந்தியர்களுடன் கிளம்பிய இந்திய வான்படை விமானம் இன்று மும்பையில் தரையிறங்கியது.
இன்று காலை 11 மணிக்கு ஜெட்டாவில் இருந்து கிளம்பிய விமானம் 3.30 மணி அளவில் மும்பை விமான நிலையத்தில் தரையிறங்கியது. அதன்படி சூடானில் இருந்து மீட்கப்பட்ட 246 இந்தியர்கள் பத்திரமாக இன்று தாயகம் திரும்பியுள்ளனர்.
ஆபரேஷன் காவேரி திட்டத்தின் கீழ், சூடானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் பணிகளில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. கடும் தாக்குதல் நடக்கும் பகுதிகளில் சிக்கியுள்ள இந்தியர்கள் பேருந்து மூலம் மீட்கப்பட்டு சூடான் துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். பின் சூடான் துறைமுகத்தில் இருந்து சவுதி அரேபியாவின் ஜெட்டா நகருக்கு இந்தியர்கள் கப்பல் மூலம் அழைத்து செல்லப்படுகின்றனர்.
சூடானில் தாக்குதல் நடைபெற்று வரும் கார்டோம் மற்றும் சூடான் துறைமுகம் இடையிலான தூரம் 850 கிலோமீட்டர்கள் ஆகும். தற்போதைய பதற்றமான சூழ்நிலையில், இந்த தூரத்தை பேருந்து மூலம் கடக்க 12 முதல் 18 மணி நேரங்கள் வரை ஆகிறது. உள்நாட்டு போர் நடைபெற்று வரும் சூடானில் இருந்து இந்தியர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.