இந்தியா

வீட்டில் நடந்த பிரசவத்தில் தாய்-குழந்தை மரணம்: அக்குபஞ்சர் மருத்துவர் கைது

Published On 2024-02-24 07:30 GMT   |   Update On 2024-02-24 07:30 GMT
  • ஆஸ்பத்திரிக்கு செல்வதற்கு முன்பாகவே ஷமீரா பீவி மற்றும் அவருக்கு பிறந்த குழந்தை பரிதாபமாக இறந்தது.
  • சம்பவத்தில் மேலும் பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்படலாம் என்று கருதப்படுகிறது.

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் திருவனந்தபுரம் பூந்துறை நேமம் கரக்காமண்டபம் பகுதியை சேர்ந்தவர் ஷமீரா பீவி(வயது36). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவருக்கு கடந்த 19-ந்தேதி அவரது கணவரின் குடும்பத்தினர் வீட்டிலேயே பிரசவம் பார்த்தனர்.

இதில் அவருக்கு அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஷமீரா பீவியை அவரது குடும்பத்தினர், அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்வதற்கு முன்பாகவே ஷமீரா பீவி மற்றும் அவருக்கு பிறந்த குழந்தை பரிதாபமாக இறந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். அதில் ஷமீரா பீவிக்கு வீட்டில் பிரசவம் பார்க்க அவரது கணவரான நயாஸ்(47) மற்றும் அவரது குடும்பத்தினரே காரணம் என்பது தெரியவந்தது. இதனால் அவர் மீது வழக்கு பதியப்பட்டது.

அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்று போலீசார் விசாரணை நடத்தினர். அதில் ஷமீரா பீவிக்கு அக்குபஞ்சர் சிகிச்சை மூலம் பிரசவம் பார்த்தது ஷிஹாபுதீன் என்ற அக்குபஞ்சர் மருத்துவர் என்பது தெரிய வந்தது.

அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தில் மேலும் பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்படலாம் என்று கருதப்படுகிறது.

Tags:    

Similar News