2 ஏக்கரில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 7 நட்சத்திர பங்களா.. பாஜக குற்றச்சாட்டு
- பங்களாவின் கழிவறையில் தங்க முலாம் பூசப்பட்ட மலத்தொட்டிகள் இருப்பதாவதும் பாஜக மேடை தோறும் பிரசாரம் செய்தது.
- பாஜகவின் இந்தக் குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை என்று ஆம் ஆத்மி கட்சி மறுப்பு தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடந்த டெல்லி சட்டமன்றத் தேர்தலில் கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மியை தோற்கடித்து பாஜக வெற்றி பெற்றது.
அரவிந்த் கேஜிரிவால் தனது அரசு பங்களாவை புதுப்பிக்கப் பொதுப் பணத்தில் இருந்து ரூ.45 கோடி செலவு செய்து சொகுசு பங்களாவாக மாற்றியதாகவும், அந்த பங்களாவின் கழிவறையில் தங்க முலாம் பூசப்பட்ட மலத்தொட்டிகள் இருப்பதாவதும் பாஜக மேடை தோறும் பிரசாரம் செய்தது.
இந்நிலையில் பஞ்சாபில் முதல்வர் பகவந்த் மான் தலைமையில் ஆம் ஆத்மி அரசு ஆட்சியில் உள்ள நிலையில் அதன் தலைநகர் சண்டிகரில் அரவிந்த் கெஜ்ரிவால் சொந்த பயன்பாட்டுக்கு 7 நட்சத்திர சொகுசு பங்களா ஒதுக்கப்பட்டுள்ளதாக பாஜக குற்றம்சாட்டி உள்ளது.
பாஜக தனது அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், பஞ்சாப் அரசின் பொது நிதியை தனது தனிப்பட்ட ஆடம்பரத் தேவைகளுக்காக கெஜ்ரிவால் தவறாகப் பயன்படுத்துவதாகவும், சண்டிகரில் அவரின் சொந்த பயன்பாட்டுக்கு 2 ஏக்கரில் அமைந்துள்ள அரசின் 7 நட்சத்திர சொகுசு பங்களாவை பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் ஒதுக்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. பங்களா என்று கூறப்படும் கட்டிடத்தின் படங்களை பாஜக வெளியிட்டுள்ளது.
பாஜகவின் இந்தக் குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை என்று ஆம் ஆத்மி கட்சி மறுப்பு தெரிவித்துள்ளது.