இந்தியா

குஜராத்தில் 5,300 ஆண்டுகள் பழமையான கல்லறைகள் கண்டுபிடிப்பு

Published On 2023-10-15 10:56 GMT   |   Update On 2023-10-15 10:56 GMT
  • சுமார் 3200 கி.மு. முதல் 2600 கி.மு. வரை சுமார் 500 ஆண்டுகள் பயன்பாட்டில் இருந்ததாக நம்புகிறார்கள்.
  • குழந்தைகள் புதைக்கப்பட்ட சிறிய கல்லறைகள் உள்ளன. உடல்கள் மல்லாந்து வைக்கப்பட்டுள்ளன.

இந்தியாவின் மேற்கு மாநிலமான குஜராத்தில், குறைந்த மக்கள் தொகை கொண்ட கட்ச் பகுதியில் உள்ள கிராமம் கதீயா. இங்கு ஒரு மணல் குன்று ஆராய்ச்சியாளர்களின் கண்களில்பட்டது. இந்த மணல் குன்றினை தொல்லியல் அறிஞர்கள் அகழாய்வு செய்தனர்.

அப்போது அவர்கள் கண்ட காட்சி வியக்க செய்தது. மணல் குன்றின் உள்ளே பழங்கால குடியிருப்பு புதைந்து கிடப்பது போன்ற அடையாளங்கள் தென்பட்டன. இதை தொடர்ந்து கேரள பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தொல்லியல் அறிஞர் ராஜேஷ் தலைமையில் இந்திய, சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் இந்த 40 ஏக்கர் பரப்பளவிலான தளத்தில் 3 கட்டமாக அகழாய்வு செய்தனர். அப்போது அது 5,300 ஆண்டுகள் பழமையான கல்லறைகள் என தெரியவந்தது. உலகின் ஆரம்பகால நகர நாகரிகங்களில் ஒன்றான சிந்து சமூகத்தைச் சேர்ந்த 500 கல்லறைகள் அதில் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இந்தக் கல்லறைகளில் சுமார் 200 கல்லறைகள் அகழ்வாராய்ச்சி செய்யப்பட்டுள்ளன.

ஹரப்பா நாகரிகம் என்றும் அழைக்கப்படும் இந்தச் சமூகம், சுமார் 5,300 ஆண்டுகளுக்கு முன்பு தற்போதைய வடமேற்கு இந்தியா மற்றும் பாகிஸ்தானில் சுடு செங்கல் நகரங்களில் வாழ்ந்த எளிமையான விவசாயிகள் மற்றும் வணிகர்களால் நிறுவப்பட்டது இது சுமார் 3200 கி.மு. முதல் 2600 கி.மு. வரை சுமார் 500 ஆண்டுகள் பயன்பாட்டில் இருந்ததாக அவர்கள் நம்புகிறார்கள்.

இதுவரையிலான அகழ்வாராய்ச்சிகள் ஒரே ஒரு முழுமையான ஆண் மனித எலும்புக்கூட்டையும், மண்டை ஓடு துண்டுகள், எலும்புகள் மற்றும் பற்கள் உட்பட பகுதியளவில் பாதுகாக்கப்பட்ட எலும்பு க்கூட்டு எச்சங்களையும் மீட்டுள்ளனர்.மேலும் 100-க்கும் மேற்பட்ட வளையல்கள் மற்றும் 27 ஓடுகளால் ஆன மணிகள். பீங்கான் பாத்திரங்கள், கிண்ணங்கள், தட்டுகள், பானைகள், சிறிய குடங்கள், குவளை, களிமண் பானைகள், தண்ணீர் கோப்பைகள், பாட்டில்கள் மற்றும் ஜாடிகளும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.

இந்த கல்லறைகளில் தனித்துவமான அம்சங்கள் உள்ளன, இதில் சில முட்டை வடிவமானவை. மற்றவை செவ்வக வடிவமானவை. குழந்தைகள் புதைக்கப்பட்ட சிறிய கல்லறைகள் உள்ளன. உடல்கள் மல்லாந்து வைக்கப்பட்டுள்ளன. ஆனால் அமில மண் காரணமாக பெரும்பாலான எலும்புகள் கரைந்துவிட்டன.

எகிப்து மற்றும் மெசப டோமியாவில் உள்ள மேல் தட்டு மக்களின் இறுதிச் சடங்குகளைப் போலல்லாமல், இவர்களின் இறுதிச் சடங்குகள் எளிமையானவை இருந்தன. இறந்தவர்களுடன் எந்த நகைகளும் ஆயுதங்களும் வைக்கப்படவில்லை.

இங்கு, பெரும்பாலான உடல்கள் துணியால் சுற்றி, செவ்வக வடிவிலான மரப் பெட்டிகளில் வைக்கப்பட்டன. கல்லறைக்குழி பெரும்பாலும் மண்பாண்ட பொருட்களால் நிரப்பப்பட்டிருக்கும், பின்னர் பெட்டி அதில் இறக்கப்படும் என்று விஸ்கான்சின் மடிசன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சிந்து சமவெளி நாகரிகத்தின் அறிஞரான ஜொனதன் மார்க் கெனோயர் கூறுகிறார். சிலர் வளையல்கள், மணிகள், அலங்காரப் பொருட்கள், செம்பால் செய்யப்பட்ட கண்ணாடியுடன் புதைக்கப்பட்டனர்.

முதியவர்கள், அவர்கள் பயன்படுத்திய உணவைப் பரிமாறுவதற்கும் சேமிப்பதற்கும் பயன்படுத்தப்பட்ட வெவ்வேறு வகையான பாத்திரங்களுடன் புதைக்கப்பட்டுள்ளனர்,

ஆனாலும் இந்த கல்லறைத் தளத்தில் பல மர்மங்கள் அடங்கி உள்ளன.

இதன் ரகசியங்கள் என்ன? இங்கு புதைக்கப்பட்டவர்கள் யார்? என்ற கேள்விகளும் எழுகின்றன. இந்தக் கல்லறைகளில் காணப்படும் லாபிஸ் லாசுலி என்னும் நீல நிற கற்கள் தூரத்தில் உள்ள ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தது என்று கருதப்படுகிறது. கல்லறைகள் நன்றாக வரையறுக்கப்பட்ட கல் சுவர்களுடன் கட்டப்பட்டிருப்பது, மக்கள் கற்களைக் கொண்டு கட்டுவதில் தேர்ச்சி பெற்றிருந்ததைக் குறிக்கிறது. இங்கு கிடைத்த மனித உடல் எச்சங்களை வேதியியல் ஆய்வுகள் மற்றும் டி.என்.ஏ. பரிசோதனைகள் செய்தால் இங்கு வாழ்ந்து இறந்த ஆரம்பகால மக்கள் பற்றி மேலும் அறிய உதவும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

Tags:    

Similar News