நிதி நிறுவனத்தில் துப்பாக்கிமுனையில் 23 கிலோ தங்கம், ரூ.10 லட்சம் கொள்ளை
- 5 மோட்டார் சைக்கிள்களில் வந்த மர்ம கும்பல் ஒன்று நிதி நிறுவனத்துக்குள் அதிரடியாக நுழைந்தது.
- நிதி நிறுவனத்தில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர்.
ஜெய்ப்பூர்:
ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில் பிரபல நிதி நிறுவனம் ஒன்றின் கிளை இயங்கி வருகிறது. இங்கு நேற்று காலையில் வழக்கம்போல ஊழியர்கள் பணிகளை மேற்கொண்டிருந்தனர்.
அப்போது 5 மோட்டார் சைக்கிள்களில் வந்த மர்ம கும்பல் ஒன்று நிதி நிறுவனத்துக்குள் அதிரடியாக நுழைந்தது. பின்னர் அவர்கள் நிதி நிறுவன ஊழியர்களை துப்பாக்கி முனையில் மிரட்டி ஓரிடத்தில் அமரவைத்தனர்.
பின்னர் நிதி நிறுவனத்தில் வைக்கப்பட்டிருந்த 23 கிலோ தங்கம் மற்றும் ரூ.10 லட்சம் ஆகியவற்றை சில நிமிடங்களில் கொள்ளையடித்து விட்டு மோட்டார் சைக்கிள்களில் சிட்டாக பறந்து சென்றனர்.
பட்டப்பகலில் நடந்த இந்த மிகப்பெரும் கொள்ளையால் அதிர்ச்சியில் உறைந்த நிதி நிறுவன அதிகாரிகள், பின்னர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
மேலும் நிதி நிறுவனத்தில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளையும் ஆய்வு செய்தனர். அப்போது 2 மர்ம நபர்கள் துப்பாக்கி முனையில் நிதி நிறுவன ஊழியர்களை தாக்குவது தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து தப்பி ஓடிய மர்ம நபர்களை கைது செய்யும் பணிகளை போலீசார் முடுக்கி விட்டனர். குறிப்பாக நகர எல்லைகளை மூடி தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
பட்டப்பகலில் நிதி நிறுவனத்தில் துப்பாக்கி முனையில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் ராஜஸ்தானில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.