இந்தியா
பணம்

பஞ்சாப் தேர்தலில் போட்டியிடுபவர்களில் 521 வேட்பாளர்கள் கோடீஸ்வரர்கள்

Published On 2022-02-12 09:44 GMT   |   Update On 2022-02-12 09:44 GMT
பஞ்சாப் தேர்தலில் போட்டியிடும் கட்சிகளில் அகாலிதளம் கட்சி வேட்பாளர்கள்தான் அதிக கோடீஸ்வரர்களாக உள்ளனர். அந்த கட்சி சார்பில் களம் இறங்கி உள்ள 96 பேரில் 89 பேர் கோடீஸ்வரர்கள்.
புதுடெல்லி:

பஞ்சாப் மாநில சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பற்றிய பின்னணி நிலவரம் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அந்த ஆய்வில் பல்வேறு ருசிகரமான தகவல்கள் தெரிய வந்துள்ளன.

தேர்தலில் களம் இறங்கி உள்ள பஞ்சாப் வேட்பாளர்களில் 41 சதவீதம் பேர் கோடீஸ்வரர்கள் என்பது தெரிய வந்துள்ளது. ஆம் ஆத்மி கட்சியில் போட்டியிடும் குல்வந்த்சிங் என்ற வேட்பாளர்தான் பஞ்சாப் வேட்பாளர்களில் மிகப்பெரிய கோடீஸ்வரர் ஆவார். அவரது சொத்து மதிப்பு ரூ.238 கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அகாலிதளம் கட்சி சார்பில் போட்டியிடும் சுக்பீர்சிங் பாதல் ரூ.202 கோடி சொத்துக்களுடன் 2-வது இடத்தில் இருக்கிறார். காங்கிரஸ் வேட்பாளர் கரன் கவுர் ரூ.155 கோடி சொத்துக்களுடன் 3-வது இடத்தில் இருக்கிறார்.

பஞ்சாப் தேர்தலில் போட்டியிடும் கட்சிகளில் அகாலிதளம் கட்சி வேட்பாளர்கள்தான் அதிக கோடீஸ்வரர்களாக உள்ளனர். அந்த கட்சி சார்பில் களம் இறங்கி உள்ள 96 பேரில் 89 பேர் கோடீஸ்வரர்கள் ஆவார்கள்.

அதே போல காங்கிரஸ் வேட்பாளர்கள் 117 பேரில் 107 பேர் கோடீஸ்வரர்கள். ஆம்ஆத்மி வேட்பாளர்கள் 117 பேரில் 87 பேர் கோடீஸ்வரர்கள். பா.ஜ.க.வில் 71 வேட்பாளர்களில் 60 பேர் கோடீஸ்வரர்கள்.

வேட்பாளர்களில் 5 வேட்பாளர்கள் தங்கள் பெயரில் எந்த சொத்தும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். வேட்பாளர்களில் 218 பேர் மீது கடுமையான குற்றப்பின்னணி வழக்குகள் உள்ளன. 15 வேட்பாளர்கள் பெண்களுக்கு எதிரான குற்றங்களை செய்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

4 வேட்பாளர்கள் மீது கொலை வழக்குகள் உள்ளன. 33 வேட்பாளர்கள் மீது கொலை முயற்சி வழக்குகள் உள்ளன.
Tags:    

Similar News