செய்திகள்
அனில் தேஷ்முக்

பண மோசடி வழக்கு - மகாராஷ்டிரா முன்னாள் உள்துறை மந்திரி கைது

Published On 2021-11-01 21:07 GMT   |   Update On 2021-11-01 21:07 GMT
பணமோசடி வழக்கு விசாரணைக்கு ஆஜராகும்படி அனில் தேஷ்முக்குக்கு அமலாக்கத் துறை 5 முறை சம்மன் அனுப்பியும் அவர் நேரில் ஆஜராகவில்லை.
மும்பை:

மகாராஷ்டிராவில் முதல் மந்திரி உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.

தேசியவாத காங்கிரசைச் சேர்ந்த அனில் தேஷ்முக் அம்மாநில உள்துறை அமைச்சராக பதவி வகித்து வந்தார்.

மும்பை மாநகர போலீஸ் கமிஷனராக இருந்த பரம்வீர் சிங் ஊர்க்காவல் படைக்கு மாற்றப்பட்டதை தொடர்ந்து, முதல் மந்திரி உத்தவ் தாக்கரேவுக்கு கடிதம் எழுதினார். இதில், அப்போதைய உள்துறை மந்திரி அனில் தேஷ்முக் பார்கள், ஓட்டல்கள் மூலம் ஒரு மாதத்திற்கு 100 கோடி ரூபாய் மாமூல் வசூலிக்குமாறு மும்பை போலீசாரை கட்டாயப்படுத்தியதாக கூறியிருந்தார்.

இதையடுத்து, ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் பதவியை ராஜினமா செய்த அனில் தேஷ்முக் மீது சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

மும்பை மற்றும் நாக்பூரில் உள்ள அனில் தேஷ்முக் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது அவருக்கு சொந்தமான 4.20 கோடி ரூபாய் சொத்துக்கள் முடக்கப்பட்டன.



பண மோசடி வழக்கில் அனில் தேஷ்முக்கின் தனி செயலர் சஞ்சீவ் பாலாண்டே, தனி உதவியாளர் குந்தன் ஷிண்டே ஆகியோரை அமலாக்கத் துறை அதிரடியாக கைது செய்தது.

இதற்கிடையே சஸ்பெண்ட் செய்யப்பட்ட உதவி இன்ஸ்பெக்டர் சச்சின் வாஸே உதவியுடன், மும்பை மதுபான விடுதி உரிமையாளர்களிடம் இருந்து 4.70 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியது. இதில் 4.18 கோடி ரூபாயை போலி நிறுவனத்தின் பெயரில் சட்ட விரோத பணப்பரிமாற்றம் செய்ததாக அதிகாரிகள் குற்றம்சாட்டினர். இதையடுத்து அனில் தேஷ்முக் மீது பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது. 

பணமோசடி வழக்கு விசாரணைக்கு ஆஜராகும்படி அனில் தேஷ்முக்குக்கு அமலாக்கத் துறை 5 முறை சம்மன் அனுப்பியும் அவர் நேரில் ஆஜராகவில்லை.

சம்மனை ரத்து செய்யக் கோரி அனில் தேஷ்முக் தாக்கல் செய்த மனுவை மும்பை ஐகோர்ட் சமீபத்தில் தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து அவர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளார்.

இந்நிலையில், மும்பையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் அனில் தேஷ்முக் நேற்று காலை விசாரணைக்கு ஆஜரானார். அதிகாரிகள் அவரிடம் 12 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தினர். அதைத்தொடர்ந்து பணப்பரிமாற்ற மோசடி வழக்கில் நேற்று இரவு 12 மணியளவில் அனில் தேஷ்முக் கைது செய்யப்பட்டார்.

Tags:    

Similar News