செய்திகள்
கோப்புப்படம்

கங்கையில் மிதக்கும் உடல்களால் கொரோனா பரவுமா? - நிபுணர்கள் விளக்கம்

Published On 2021-05-12 19:06 GMT   |   Update On 2021-05-12 19:06 GMT
கங்கையில் மிதக்கும் உடல்களால் கொரோனா பரவுமா என்பது குறித்து நிபுணர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.
புதுடெல்லி:

உத்தரபிரதேச மாநிலம் பல்லியா மாவட்டத்தில் பாயும் கங்கை ஆற்று பகுதியில் சமீபத்தில் 45 உடல்கள் மிதந்தன. நேற்று முன்தினம் பீகார் மாநிலம் பக்சார் மாவட்டத்தில் கங்கை ஆற்றில் மிதந்து வந்த 71 உடல்கள் மீட்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டன.

கடந்த 10-ந்தேதி, இமாசலபிரதேச மாநிலம் ஹமிர்பூர் மாவட்டத்தில் யமுனை ஆற்றில் மிதந்த 5 உடல்கள் மீட்கப்பட்டு தகனம் செய்யப்பட்டன.

கொரோனா உயிரிழப்புகள் அதிகரித்து வருவதால், இவை கொரோனாவால் பலியானோரின் உடல்களாக இருக்குமோ என்ற சந்தேகம் நிலவி வருகிறது. அப்படி இருந்தால், அவற்றின் மூலமாக கொரோனா பரவி விடுமோ என்ற அச்சமும் எழுந்துள்ளது.



இதுகுறித்து நிபுணர்கள் விளக்கம் அளித்துள்ளனர். கான்பூர் ஐ.ஐ.டி.யின் சுற்றுச்சூழல் என்ஜினீயரிங் பேராசிரியரும், மத்திய அரசின் கங்கை தூய்மைப்படுத்தும் திட்டத்தில் தொடர்புடையவருமான சதீஷ் டாரே கூறியதாவது:-

கங்கை ஆற்றிலும், அதன் துணை ஆறுகளிலும் உடல்களை போடுவது புதிதல்ல. ஆனால், கடந்த 10 முதல் 15 ஆண்டுகளில் இத்தகைய நிகழ்வுகள் குறைந்துள்ளன. தற்போது, கொரோனா காலத்தில் கங்கை ஆற்றில் உடல்களை போடுவது தீவிரமான பிரச்சினைதான்.

கங்கையும், யமுனையும் எண்ணற்ற கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரமாக திகழ்கின்றன. நீர்நிலையில் உடல்களை போடுவதன் மூலம் நீர்நிலை மாசு அடையும். ஆனால், தண்ணீர் மூலம் கொரோனா பரவ வாய்ப்பில்லை.

ஒருவேளை அவை கொரோனா நோயாளிகளின் உடல்களாக இருந்தாலும், நீரோட்டத்தில் அடித்து வரப்படும்போது கிருமிகள் நீர்த்துப் போய்விடும். குறிப்பிடத்தக்க அளவுக்கு பாதிப்பு இருக்காது. எனவே, இதுபற்றி கவலைப்பட வேண்டாம்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News