செய்திகள்
தேவகவுடா

புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு அவசரகதியில் நிறைவேற்றி இருக்கக்கூடாது: தேவகவுடா

Published On 2021-02-11 03:41 GMT   |   Update On 2021-02-11 03:41 GMT
புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு அவசரகதியில் நிறைவேற்றி இருக்கக்கூடாது என்றும், சட்டமன்ற இடைத்தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்த மாட்டோம் என்றும் தேவகவுடா கூறினார்.
ராய்ச்சூர் :

முன்னாள் பிரதமர் தேவகவுடா ராய்ச்சூரில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டம் கவுரவ பிரச்சினையாக மாறக்கூடாது. பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக்கொள்ள வேண்டும். விவசாயிகளுக்கு தங்களின் பிரச்சினையை சொல்லும் சுதந்திரம் இருக்கிறது. கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் விவசாயிகள் இதுவரை போராட்டம் நடத்தி வந்துள்ளனர்.

புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு அவசரகதியில் நிறைவேற்றி இருக்கக்கூடாது. 11 கட்டமாக நடைபெற்ற மத்திய அரசு மற்றும் விவசாயிகள் இடையேயான பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்து முடிந்துள்ளது. குடியரசு தினத்தன்று நடைபெற்ற கலவரத்திற்கு யார் காரணம் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. விவசாயிகளின் போராட்டத்திற்கு காலிஸ்தான், வெளிநாட்டு பணம் வந்துள்ளதாக கூறப்படும் தகவல்கள் குறித்து நான் கருத்துக்கூற மாட்டேன்.

உள்துறை அமைச்சகம் அந்த கலவரம் குறித்து விசாரணை நடத்தி வருகிறது. அந்த விசாரணை அறிக்கை வந்த பிறகு நான் பேசுகிறேன். இட ஒதுக்கீடு கோரி பல்வேறு மடாதிபதிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த விஷயத்தில் சித்தராமையாவிடம் அதிக தகவல்கள் உள்ளன. இதுபற்றி அவரே பதில் கூறட்டும். பெலகாவி நாடாளுமன்ற தொகுதி மற்றும் மஸ்கி, சிந்தகி, பசவ கல்யாண் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் எங்கள் கட்சி சார்பில் வேட்பாளர்களை நிறுத்த மாட்டோம்.

வருகிற 2023-ம் ஆண்டு கர்நாடக சட்டசபைக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கு தயாராகும் விதமாக நான் ஜனதா தளம் (எஸ்) கட்சியை பலப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபடுவேன். குமாரசாமி தலைமையில் நடைபெற்ற கூட்டணி அரசு கவிழ்ந்த பிறகு நான் யாரையும் குறை கூறவில்லை. விரைவில் நடைபெற உள்ள 4 மாநில சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவுக்கு பின்னடைவு ஏற்படும்.

தமிழகத்தில் பா.ஜனதா அதிக இடங்களில் வெற்றி பெறாது என்ற கருத்து நிலவுகிறது. மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியின் தைரியம் பாராட்டுக்குரியது. வாக்குகள் குறைவாக வந்தாலும் அங்கு மம்தா பானர்ஜி மீண்டும் முதல்-மந்திரி ஆவார்.

இவ்வாறு தேவகவுடா கூறினார்.
Tags:    

Similar News