செய்திகள்
பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடிக்கு இமெயில் மூலம் கொலை மிரட்டல்

Published On 2020-09-04 08:49 GMT   |   Update On 2020-09-04 08:49 GMT
பிரதமர் நரேந்திர மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்து தேசிய புலனாய்வு முகமைக்கு இமெயில் ஒன்று அனுப்பப்பட்டுள்ள விஷயம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

புதுடெல்லி:

பிரதமர் நரேந்திர மோடிக்கு இமெயில் மூலமாக கொலை மிரட்டல் ஒன்று வந்துள்ளது. தேசிய புலனாய்வு படைக்கு இந்த இமெயில் வந்திருக்கிறது. அதில் நரேந்திர மோடியை கொல்வோம் என்று ஒருவரி வாசகம் இடம் பெற்றுள்ளது.

கடந்த ஆகஸ்டு மாதம் 8-ந் தேதி இந்த மெயில் வந்து உள்ளது. இதையடுத்து இந்திய உளவுப்படை மற்றும் பாதுகாப்பு பிரிவினர் உஷார் அடைந்துள்ளனர்.

இது சம்பந்தமாக இந்திய உளவுப்படைகளான ரா, ஐ.பி, ராணுவப் புலனாய்வுப் படை ஆகியவை விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இந்த இமெயில் வெளி நாட்டில் இருந்து வந்துள்ளது. எலால்வானி12345@ஜிமெயில் என்ற முகவரியில் இருந்து அனுப்பப்பட்டு உள்ளது. அதை யார் அனுப்பியது என்பதை கண்டுபிடிக்க புலனாய்வு படையினர் தீவிரமாக முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

கொலை மிரட்டல் காரணமாக பிரதமருக்கு பாதுகாப்பை அதிகப்படுத்தும்படி மத்திய உள்துறை, சிறப்பு பாதுகாப்பு படைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதனடிப்படையில் பிரதமருக்கு பாதுகாப்பு அதிகப்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து பகுதிகளிலும் கண்காணிப்புகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த இமெயிலை அனுப்பியவர்கள் யாரென கண்டுபிடிப்பதற்காக சர்வதேச அமைப்புகளிடமும் இந்திய புலனாய்வு படையினர் தொடர்பில் இருக்கிறார்கள்.

Tags:    

Similar News