செய்திகள்
வீடியோ கால் மூலம் திருமண நிச்சயதார்த்தம்

பெலகாவியில், வீடியோ கால் மூலம் திருமண நிச்சயதார்த்தம்

Published On 2020-04-10 08:59 IST   |   Update On 2020-04-10 08:59:00 IST
ஊரடங்கு உத்தரவால் பெலகாவியில், வீடியோ கால் மூலம் நடந்த திருமண நிச்சயதார்த்தம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
பெலகாவி மாவட்டம் உக்கேரி தாலுகா சங்கேஷ்வர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ் பட்டீல். இவரது மகள் ஆஷா. இவருக்கும், பாகல்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மகாந்தேஷ் என்பவருக்கும் திருமணம் பேசப்பட்டது. இவர்களது திருமணம் நிச்சயதார்த்தம் ஏப்ரல் மாதம் 9-ந் தேதி(அதாவது நேற்று) நடத்தப்பட வேண்டும் என்று இருவரின் குடும்பத்தினரும் திட்டமிட்டு இருந்தனர்.

ஆனால் ஊரடங்கு உத்தரவால் இவர்களது திருமண நிச்சயதார்த்தம் நடைபெறுமா? என்ற கேள்விக்குறி எழுந்தது. இந்த நிலையில் வீடியோ கால் மூலம் திருமண நிச்சயத்தார்த்தம் நடத்தலாம் என்று ஆஷா தனது பெற்றோரிடம் கூறினார்.

அதன்பேரில் அவர்கள் இதுபற்றி மகாந்தேசின் குடும்பத்தாரிடம் பேசினர். அவர்களும் இதற்கு ஒப்புக் கொண்டனர். அதையடுத்து ஆஷா, தனது வருங்கால கணவர் மகாந்தேசுக்கு தன்னுடைய செல்போன் மூலம் வீடியோ கால் செய்தார்.

பின்னர் வீடியோ கால் மூலமே இருவரது குடும்பத்தாரும் தங்களது வீடுகளில் இருந்தபடி பேசி திருமண தேதியை நிச்சயித்தனர். இதுதொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Similar News