செய்திகள்
கோப்பு படம்

மெட்ரோ ரெயில்களில் பெண்கள் பெப்பர் ஸ்ப்ரே கொண்டு செல்ல அனுமதி

Published On 2019-12-04 17:14 GMT   |   Update On 2019-12-04 17:14 GMT
ஐதராபாத்தில் உள்ள மெட்ரோ ரெயில்களில் பெப்பர் ஸ்ப்ரே எனப்படும் மிளகுத்தூள் தூவியை கொண்டு செல்ல பெண்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஐதராபாத்:

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் பெண் கால்நடை டாக்டர் தனது பைக் பஞ்சர் ஆனதால் சாத்நகர் பகுதியில் சுங்கச்சாவடி அருகே பைக்கை நிறுத்தி உள்ளார். 

அப்போது அவருக்கு உதவி செய்வதாக கூறி ஒரு லாரி டிரைவர் உள்பட 4 பேர் அந்த பெண்ணை கடத்திச்சென்று கற்பழித்து கொடூரமாக எரித்துக்கொலை செய்துள்ளனர். 

இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூரத்தில் ஈடுபட்ட 4 பேரும் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில், சமீபகாலமாக அதிகரித்துவரும் பாலியல் குற்றங்கள், கற்பழிப்பு போன்ற பெண்களுக்கு எதிராக நடைபெற்று வரும் சம்பவங்களை கண்டித்து நாடு முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகிறது. 



மேலும், பெண்கள் தங்களை தற்காத்துக் கொள்ள தேவையான பல்வேறு பொருட்களை தங்கள் பயணத்தின் போது கொண்டு செல்லவும் தொடங்கியுள்ளனர். 

குறிப்பாக பெப்பர் ஸ்ப்ரே எனப்படும் மிளகுத்தூள் தூவி அந்த தற்காப்பு பொருளில் முக்கியமானகாக உள்ளது. ஆனால் நாட்டில் உள்ள பல்வேறு மெட்ரோ ரெயில்களில் பயணிக்கும் பயணிகள் பெப்பர் ஸ்ப்ரே கொண்டு செல்ல அனுமதி கிடையாது.

இந்நிலையில், ஐதராபாதில் உள்ள மெட்ரோ ரெயில் பயணிக்கும் பெண் பயணிகள் பெப்பர் ஸ்ப்ரே-வை தங்கள் பயணத்தின் போது கொண்டு செல்ல நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. 

இக்கட்டான சூழ்நிலைகளில் பெண்கள் தங்களை தற்காத்துக்கொள்ள உதவும் பெப்பர் ஸ்ப்ரே-வை பெண்கள் மெட்ரோ ரெயில் கொண்டு செல்லலாம் என அதன் நிர்வாக இயக்குனர் தெரிவித்துள்ளார்.

பெங்களுர் மெட்ரோ ரெயில்களில் பெண்கள் பெப்பர் ஸ்ப்ரே கொண்டு செல்ல ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
Tags:    

Similar News