செய்திகள்
ஆதார் அட்டை

வாலிபரின் தற்கொலைக்கு காரணமாக இருந்த ஆதார் கார்டு

Published On 2019-09-19 06:53 GMT   |   Update On 2019-09-19 06:53 GMT
மேற்குவங்க மாநிலம் முர்சிதாபாத் மாவட்டத்தில் 27 வயது வாலிபரின் தற்கொலைக்கு காரணமாக ஆதார் கார்டு இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொல்கத்தா:

மேற்குவங்க மாநிலம் முர்சிதாபாத் மாவட்டத்தை சேந்தவர் மிலன் மண்டல் (வயது 27).

கட்டிட தொழிலாளியான இவர் கேரள மாநிலத்தில் வேலை பார்த்து வந்தார். அவ்வப்போது சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். அதேபோல இப்போது ஊருக்கு சென்றிருந்தார்.

அசாம் மாநிலத்தில் வங்காளதேசம் மக்கள் அதிக அளவில் சட்டவிரோதமாக குடியேறி இருப்பதை கண்டுபிடிப்பதற்காக தேசிய குடிமக்கள் பதிவேடு கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

அதேபோல மேற்கு வங்காளத்திலும் கணக்கெடுப்பு நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே அங்குள்ள மக்கள் அதற்கான ஆதாரங்களை தயார் நிலையில் வைத்துள்ளனர்.

மிலன் மண்டலும் ஆதாரங்களை தயார் செய்தார். அவருடைய ஆதார் கார்டில் பெயரில் எழுத்து பிழை இருந்தது. அதையும் சரி செய்தால் தான் நாளை பிரச்சனை இல்லாமல் இருக்கும் என்று கருதினார்.

அங்குள்ள அரசு வட்டார அலுவலகத்தின் மூலம் தான் ஆதார் கார்டு எழுத்து பிழைகளை சரி செய்ய முடியும். இதற்கான முயற்சியில் அவர் ஈடுபட்டார். ஆனால் அவர் 17 நாட்களாக அந்த அலுவலகத்திற்கு அலைந்து திரிந்தும் பெயர் எழுத்து பிழையை சரி செய்ய முடியவில்லை. இதனால் குடிமக்கள் கணக்கெடுப்பில் தனது பெயர் இடம்பெறாமல் இருப்பதற்கு வாய்ப்பு இருப்பதாக கருதி பயந்தார்.

இதில் விரக்தி அடைந்த அவர் வீட்டில் தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

இப்போதெல்லாம் எல்லா வி‌ஷயங்களுக்கும் ஆதார் கார்டை தான் அடையாளமாக கேட்கிறார்கள். ஆனால் ஆதார் கார்டில் ஏராளமான குளறுபடிகள் உள்ளன. அதை சரிசெய்ய முடியாததால் அந்த வாலிபர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
Tags:    

Similar News