செய்திகள்
எடியூரப்பா

கட்சிக்கு எதிராக பேசினால் மந்திரி பதவி கிடைக்காது- எடியூரப்பா எச்சரிக்கை

Published On 2019-08-29 02:06 GMT   |   Update On 2019-08-29 02:06 GMT
கட்சிக்கு எதிராக பேசினால் மந்திரி பதவி கிடைக்காது என்று அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு முதல்-மந்திரி எடியூரப்பா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பெங்களூரு :

கர்நாடகத்தில் எடியூரப்பா தலைமையில் பா.ஜனதா அரசு அமைந்துள்ளது. மந்திரிசபையில் முதல்-மந்திரி உள்பட 18 பேருக்கு இடம் வழங்கப்பட்டுள்ளது. இன்னும் 16 இடங்கள் காலியாக உள்ளன. அந்த இடங்கள், தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களுக்காக ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளன.

மந்திரி பதவி கிடைக்காததால் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் உமேஷ்கட்டி, பாலச்சந்திர ஜார்கிகோளி, திப்பாரெட்டி, கூளிஹட்டி சேகர், ராஜூகவுடா உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டவர்கள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினர். இது எடியூரப்பா அரசுக்கு சிக்கலை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் முதல்-மந்திரி எடியூரப்பாவை பெங்களூருவில் உள்ள அவரது இல்லத்தில் அதிருப்தியில் உள்ள திப்பாரெட்டி எம்.எல்.ஏ. நேற்று நேரில் சந்தித்து பேசினார். அப்போது, பேசிய எடியூரப்பா, “முழு பெரும்பான்மையுடன் நாம் அரசு அமைக்கவில்லை. தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களுக்கு மந்திரி பதவி வழங்க வேண்டியுள்ளது. நமது நிலையை புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் கட்சிக்கு எதிராக அதிருப்தியை ஊடகங்கள் மூலம் வெளிப்படுத்தினால் உங்களுக்கு கிடைக்க வேண்டிய மந்திரி பதவி கிடைக்காமல் போய்விடும்.

எல்லாவற்றையும் கட்சி மேலிட தலைவர்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள். உங்கள் தொகுதியில் உள்ள பிரச்சினைகள் அடங்கிய பட்டியலை கொடுங்கள். அவற்றுக்கு தேவையான நிதியை உடனே ஒதுக்கி கொடுக்கிறேன். இன்னும் சுமார் 4 ஆண்டுகள் உள்ளது. மந்திரிசபை மாற்றம் நடைபெறும். அப்போது உங்களுக்கும் வாய்ப்பு கிடைக்கும். அதுவரை பொறுமை காக்க வேண்டும்“ என்று கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதை ஏற்றுக்கொண்ட திப்பாரெட்டி, அரசுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாகவும், கட்சிக்கு எதிராக பேச மாட்டேன் என்றும் கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார். அதே போல் கூளிஹட்டி சேகர் எம்.எல்.ஏ.வுக்கும் இதே தகவலை எடியூரப்பா தெரிவித்துள்ளார். 
Tags:    

Similar News