செய்திகள்

பாஜக சாதி அரசியல் செய்து வருகிறது - அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு

Published On 2019-05-11 12:00 IST   |   Update On 2019-05-11 12:00:00 IST
சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் பிரபல செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், பாஜக சாதி அரசியல் செய்து வருகிறது என குற்றம் சாட்டி பேசியுள்ளார்.
புது டெல்லி:

இந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 11ம் தேதி தொடங்கி, ஒவ்வொரு மாநிலத்துக்கும் பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதுவரை 5 கட்டங்களாக தேர்தல் முடிந்துள்ள நிலையில்,  நாளை 6ம் கட்ட தேர்தலும், வரும் 19ம் தேதி 7ம் கட்ட தேர்தலும் நடைபெற உள்ளது.

இந்நிலையில் சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் இன்று பிரபல செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

பாஜகவினர் அவர்கள் கட்சிக்கு என்ன வேண்டுமோ, அதை செய்வதற்காக மக்களை ஏமாற்றி கொண்டிருக்கிறார்கள். மேலும் பாஜக, சாதி அரசியல் செய்து வருகிறது. இவர்களின் ஆட்சி வெவ்வேறு சாதி, மதத்தவர்களிடம் வெறுப்புணர்வை ஏற்படுத்துகிறது. பாஜக ஆட்சி பொய்களையும், வெறுப்புணர்வையும் முன்வைத்தே இயங்குகிறது.



மற்ற கட்சியினருக்கு ரெட் கார்ட் வழங்குவதன்  மூலம் பாஜக வெற்றி பெற முயல்கிறது. சமாஜ்வாடி கட்சியினருக்கு ரெட் கார்ட் கொடுத்து, அவர்கள் போட்டியில் இருந்து விலக வேண்டும் என அதிகாரிகளுக்கு மறைமுகமாக உத்தரவிட்டுள்ளனர்.

எனவே தான் பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி கட்சியினர் பலர் ரெட் கார்ட் வாங்கியுள்ளனர். வாக்குச்சாவடிக்குள் நுழைய முடியாமல் எங்கள் தொண்டர்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். இது குறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளோம். 

எங்கள் கூட்டணியில் இருப்பவர்களை தவிர, பாஜகவில் இருப்பவர்கள் அனைவரும் சரியானவர்களா? ஒருவர் கூட குற்றம் புரிந்தவர்  இல்லையா? பாஜக, தாங்கள் தான் குற்றமற்றவர்கள் என்றும் மற்றவர்கள் போலியானவர்கள் என்றும் கூறி மக்களை அச்சுறுத்தும் முயற்சியில் உள்ளது.

வரவிருக்கும் 6ம் கட்ட தேர்தலில் பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் ஒரு சீட்டில் கூட வெற்றி பெற முடியாது. 7ம் கட்ட தேர்தலில் பாஜக ஒரு தொகுதியில் தான் வெற்றி பெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Tags:    

Similar News