செய்திகள்

தென்னிந்தியாவை மோடி அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்தியது- சசி தரூர் விமர்சனம்

Published On 2019-05-07 15:35 IST   |   Update On 2019-05-07 15:35:00 IST
தென்னிந்தியாவை மோடி அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்தியதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சசி தரூர் விமர்சனம் செய்தார். #LokSabhaElections2019 #ShashiTharoor
புதுடெல்லி:

பாராளுமன்றத் தேர்தலில், 5ம் கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்துள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவரான சசி தரூர் இன்று பிடிஐ-க்கு அளித்த பேட்டி வருமாறு:-

மோடி தலைமையிலான மத்திய அரசு, தென் மாநிலங்களை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்தியது. பாஜகவின் கடந்த 5 ஆண்டு கால ஆட்சியில் கூட்டாட்சி முறை மீது பெரிய அளவில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. எனவே இந்த ஆட்சியை அகற்றுவதற்கும், நாட்டின் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்கும் வகையிலும், இந்த பாராளுமன்றத் தேர்தலில் தென்மாநிலங்கள் முக்கிய பங்கு வகிக்கும்.



கேரள மாநிலம் வயநாட்டில் காங்கிரஸ் தலைவர்  ராகுல் காந்தி  போட்டியிட முடிவு செய்தது, மத்தியில் காங்கிரஸ் தலைமையில் ஆட்சியமைந்தால் தென் மாநிலங்களின் பிரச்சனைகள் மற்றும் கோரிக்கைகள் புறக்கணிக்கப்படாது என்பதை உணர்த்துகிறது.

2014 தேர்தலில் பாஜக 282 தொகுதிகளை கைப்பற்றியது. இந்த முறை அது நடக்காது. பாஜக அரசின் மோசமான செயல்பாடுகள் காரணமாக அவர்களின் சீட் எண்ணிக்கை கணிசமாக குறைய வாய்ப்பு உள்ளது. இதனால், ஆட்சியமைக்க பிராந்திய கட்சிகளிடம் ஆதரவு கேட்கும் நிலை உருவாகும். ஆனால், அவர்களின் கூட்டணியில் உள்ள பெரும்பாலான பிராந்திய கட்சிகள் கூட அவர்களுக்கு ஆதரவு அளிக்க விரும்ப மாட்டார்கள்.

பாஜக எதிர்ப்பு அலை, காங்கிரஸ் கட்சி செய்த சாதனைகள் மற்றும் பிராந்திய கட்சிகளுடன் இணைந்து பணியாற்றிய விதம் ஆகியவற்றை பார்க்கும்போது, மத்தியில் கூட்டணி ஆட்சிதான் அமையும் என்பது தெளிவாகிறது. அப்படி கூட்டணி ஆட்சி அமைந்தால் அது ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியாக இருக்கும்.

காங்கிரஸ் தனிமெஜாரிட்டி பெற்றால் ராகுல் காந்தி பிரதமராக தேர்வு செய்யப்படுவார். தனி மெஜாரிட்டி இல்லாமல் கூட்டணி அரசு அமைந்தால், கூட்டணி தலைவர்களுடன் கலந்து ஆலோசனை செய்து பிரதமர் தேர்வு செய்யப்படுவார்.

இவ்வாறு சசி தரூர் கூறினார். #LokSabhaElections2019 #ShashiTharoor

Similar News