செய்திகள்

ராஜீவ் காந்தி குறித்து பேச்சு - பிரதமர் மோடி மீது தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகார்

Published On 2019-05-07 09:35 IST   |   Update On 2019-05-07 09:35:00 IST
உத்தரபிரதேசம் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரப்பொதுக் கூட்டத்தில் கலந்துக் கொண்ட பிரதமர் மோடி, ராஜீவ் காந்தி குறித்து பேசினார். இதையடுத்து காங்கிரஸ் கட்சியினர் தேர்தல் ஆணையத்தில் மோடி மீது புகார் அளித்துள்ளனர். #PMModi #Congress
புது டெல்லி:

உத்தரபிரதேசம் மாநிலத்தில் ஏப்ரல் 11ம் தேதி  துவங்கிய பாராளுமன்ற தேர்தலின் 5 கட்டங்கள் முடிவடைந்த நிலையில், மீதமுள்ள தொகுதிகளுக்கு 2  கட்டங்களாக  மே 12,19 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

இதற்காக காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் முக்கிய தலைவர்களும், பல்வேறு தொகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



அந்த வகையில் பிரதமர் நரேந்திர மோடி உத்தரபிரதேசத்தில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் உரையாற்றியபோது, 'ராஜீவ் காந்தி ‘மிஸ்டர் கிளீன்’ என காங்கிரஸ் கட்சியினரால் போற்றப்பட்டார். ஆனால் கடைசி காலத்தில் அவருடைய வாழ்க்கை ‘நம்பர்–1’ ஊழல்வாதியாக தான் முடிவடைந்தது' என கூறினார்.

மோடியின் இந்த பேச்சுக்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும் இது தொடர்பாக நேற்று  காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் சிங்வி, ராஜீவ் சுக்லா, சல்மான் குர்ஷித் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு சென்று அதிகாரிகளை சந்தித்தனர்.

அப்போது, இந்திய கலாச்சாரத்துக்கு எதிராகவும், சட்டவிரோதமாகவும் பேசி வரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அவர் தேர்தல் பிரசாரம் செய்ய தடை விதிக்க வேண்டும் எனவும் அவர்கள் புகார் தெரிவித்தனர். #PMModi #Congress

Similar News