செய்திகள்

மத்திய அரசின் தரவரிசை பட்டியலில் சென்னை ஐ.ஐ.டி. தொடர்ந்து முதலிடம்

Published On 2019-04-08 12:00 GMT   |   Update On 2019-04-08 12:00 GMT
அகில இந்திய அளவில் உயர்கல்வி நிறுவனங்களை தரவரிசைப்படுத்தும் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை தொடர்ந்து இந்த ஆண்டும் சென்னை ஐ.ஐ.டி.க்கு முதலிடம் அளித்துள்ளது. #IITChennai #HRDranking
புதுடெல்லி:

மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் நாடு முழுவதும் உள்ள உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களை ஆய்வு செய்து தரவரிசை பட்டியலை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. 2015-ம் ஆண்டு முதல் இப்படி தரவரிசை பட்டியல் வெளியிடப்படுகிறது.

கல்வி பயிற்சி, கற்கும் திறன், ஆராய்ச்சி பணி, தேர்வு முடிவுகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை அடிப்படையாக கொண்டு இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களின் தரவரிசை பட்டியல் ஆண்டுதோறும் தயாரிக்கப்படுகிறது.

இந்த ஆண்டு நாடு முழுவதும் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகங்கள் மற்றும் தனியார் கல்லூரி நிறுவனங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அதன் தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.



“2019-ம் ஆண்டுக்கான இந்தியாவின் சிறந்த பொறியியல் கல்லூரிகள்” என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள அந்த தரவரிசை பட்டியலில் சென்னை கிண்டியில் உள்ள ஐ.ஐ.டி.யான இந்திய தொழில்நுட்பக் கழகம் அகில இந்திய அளவில் முதல் இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளது. தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக இந்த சிறப்பிடத்தை சென்னை ஐ.ஐ.டி. பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த தரவரிசை பட்டியலில் மும்பை ஐ.ஐ.டி. இரண்டாவது இடத்திலும், டெல்லி ஐ.ஐ.டி. மூன்றாவது இடத்திலும் உள்ளன.

மருத்துவ கல்லூரிகளில் டெல்லி எய்ம்ஸ் முதல் இடத்தையும், சட்டக் கல்லூரிகளில் பெங்களூரு தேசிய சட்டப்பள்ளி முதல் இடத்தையும் பிடித்துள்ளன. #IITChennai #HRDranking
Tags:    

Similar News