செய்திகள்

தெலுங்கானாவில் மாயாவதி பிரசாரம்- பாஜக, காங்கிரஸ் மீது கடும் தாக்கு

Published On 2019-04-05 09:16 IST   |   Update On 2019-04-05 11:52:00 IST
தெலுங்கானா மாநிலத்தில் ஜன சேனா கட்சி மற்றும் பகுஜன் சமாஜ் வேட்பாளர்களை ஆதரித்து மாயாவதி பிரசாரம் செய்தபோது, பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளை கடுமையாக சாடினார். #LokSabhaElections2019 #Mayawati
ஐதராபாத்:

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி பிரசாரம் மேற்கொண்டார். ஜன சேனா கட்சி மற்றும் பகுஜன் சமாஜ் வேட்பாளர்களை ஆதரித்து மாயாவதி பேசியதாவது:-

கடந்த பொதுத்தேர்தலின்போது பாஜக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. இப்போது புதிய வாக்குறுதிகளுடன் மீண்டும் போட்டியிடுகிறது. பாஜக ஆட்சியில் அனைத்து மக்களும் மகிழ்ச்சியை இழந்துவிட்டனர்.



இதேபோல் காங்கிரஸ் கட்சியும், தனது ஆட்சிக்காலத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், வறுமை ஒழிப்பு உள்ளிட்ட கவர்ச்சியான வாக்குறுதிகளை வழங்கி உள்ளது.

நியாய் திட்டத்தின்மூலம் ஏழைகளுக்கு குறைந்தபட்ச வருவாய் உறுதி திட்டத்தை செயல்படுத்த உள்ளதாக காங்கிரஸ் கூறுகிறது. முதலில், காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் இந்த திட்டத்தை செயல்படுத்தி ஏழைகளுக்கு ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் வழங்கவேண்டும். காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் இந்த திட்டத்தை செயல்படுத்த முடியாதபோது, நாடு முழுவதும் எப்படி அவர்களால் செயல்படுத்த முடியும்? பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளால் நீங்கள் (மக்கள்) தவறாக வழிநடத்தப்பட்டுவிடக் கூடாது. அவர்களின் வலையில் வீழ்ந்துவிடக் கூடாது.

ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஆகிய தென்மாநிலங்களில் மக்களும் மாற்றத்தை விரும்புகிறார்கள். எனவே, எங்கள் வேட்பாளர்களுக்கு மக்கள் ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும். காங்கிரஸ் ஆட்சியின்போது தெலுங்கானா பிராந்தியம் புறக்கணிக்கப்பட்டதால்தான், தனி மாநில கோரிக்கை தீவிரமடைந்தது. இப்போது தெலுங்கானா தனி மாநிலமாக மாறிவிட்டது. இருப்பினும் பெரிய அளவில் வளர்ச்சி அடையவில்லை. மக்கள் இன்னும் புறக்கணிக்கப்படுகிறார்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.  #LokSabhaElections2019 #Mayawati

Similar News