செய்திகள்

ஐதராபாத் கண்காட்சியில் பயங்கர தீ விபத்து- 100 கடைகள் தீயில் கருகின

Published On 2019-01-31 04:26 GMT   |   Update On 2019-01-31 04:26 GMT
ஐதராபாத்தில் கண்காட்சி நடைபெற்ற இடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தன. 7 பேர் படுகாயமடைந்தனர். #Hyderabadfireaccident
ஐதராபாத்:

தெலுங்கானா மாநில தலைநகர் ஐதராபாத்தின் நாம்பள்ளி பகுதியில் உள்ள பொருட்காட்சி மைதானத்தில், ஜனவரி 1-ம் தேதி முதல் அகில இந்திய தொழில்துறை கண்காட்சி நடைபெற்று வருகிறது. நமாய்ஷ் என்ற பெயரில் நடத்தப்படும் இந்த கண்காட்சி, மொத்தம் 45 நாட்கள் நடத்தப்படுகிறது. இதில் 100க்கும் மேற்பட்ட விற்பனை நிலையங்கள் உள்ளன. விடுமுறை நாட்களில் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் ஒன்றாக இந்த கண்காட்சி உள்ளது. இக்கண்காட்சி ஐதராபாத்தின் காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தின் எதிரே அமைந்துள்ளது.

இந்நிலையில், கண்காட்சி அரங்கில் உள்ள கடை ஒன்றில் நேற்று மாலை திடீர் விபத்து ஏற்பட்டது. பின்னர் மற்ற கடைகளுக்கும் தீ பரவியது. இதனால் ஸ்டால்களில் இருந்தவர்கள் பதறியடித்து வெளியேறினர்.

தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும், அப்பகுதிக்கு 13 தீயணைப்பு வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். கண்காட்சி அரங்கில் இருந்த பொதுமக்கள் மற்றும் காயமடைந்தவர்கள் வெளியேற்றப்பட்டனர்.

இந்த தீ விபத்தில் 7 பேர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். சுமார் 100 கடைகள் தீயில் கருகி சாம்பலாகின.

கண்காட்சியில் இருந்த விற்பனை நிலையங்களின் உரிமையாளர்கள் , தங்களுக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், வங்கிகளில் கடன் பெறும் வகையில் உதவி தேவைப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட கடைகளின் உரிமையாளர்களிடம் விசாரணை நடத்தி, அவர்களின் இழப்பை ஈடுசெய்ய ஆய்வு நடத்தப்படும் என தெலுங்கானா உள்துறை அமைச்சர் முகமது அலி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.  #Hyderabadfireaccident
Tags:    

Similar News