செய்திகள்

பாராளுமன்ற தேர்தலில் மீண்டும் போட்டியிட விருப்பம் இல்லை - நடிகர் இன்னசென்ட்

Published On 2019-01-25 05:55 GMT   |   Update On 2019-01-25 05:55 GMT
பாராளுமன்ற தேர்தலில் மீண்டும் போட்டியிட விருப்பம் இல்லை, இதற்கு என் உடல்நிலையும் ஒரு காரணம் என்று நடிகர் இன்னசென்ட் கூறி உள்ளார். #Innocent #Parliamentelection
திருவனந்தபுரம்:

மலையாள திரையுலகில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் இன்னசென்ட்.

சினிமாவில் பிரபலமான இன்னசென்ட் இடதுசாரி சிந்தனை கொண்டவர். கடந்த பாராளுமன்ற தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கூட்டணி வேட்பாளராக கேரளாவின் சாலக்குடி தொகுதியில் போட்டியிட்டு எம்.பி. ஆனார்.

இந்த முறையும் அவர், தேர்தலில் போட்டியிடுவாரா? என்று அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். இது தொடர்பாக இன்னசென்ட் அளித்த பேட்டி வருமாறு:-

பாராளுமன்ற தேர்தலில் மீண்டும் போட்டியிடுமாறு கம்யூனிஸ்டு தலைவர்கள் பலரும் கூறி வருகிறார்கள். ஆனால் இம்முறை தேர்தலில் நிற்க எனக்கு விருப்பம் இல்லை. இதற்கு என் உடல்நிலையும் ஒரு காரணம்.

நான், இப்போது மிகவும் சோர்வாக உள்ளேன். எனவேதான் தேர்தலை சந்திக்க விரும்பவில்லை.

தோல்வி பயம் காரணமாக தேர்தலை சந்திக்க பயப்படவில்லை. எனது தந்தை ஒரு கம்யூனிஸ்டு. அவர், அடிக்கடி எனக்கு ஒரு அறிவுரை கூறுவார். நமது விருப்பங்கள் ஒரு கட்டுக்குள் இருக்க வேண்டும் என்பார்.

இதை நான், முழுமையாக உணர்ந்துள்ளேன். எனவே தான் இத்தேர்தலில் போட்டியிடாமல் தவிர்க்க நினைத்துள்ளேன்.

மூத்த தலைவர்கள் பலரும் இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று பேசுவதை பலமுறை கேட்டுள்ளேன். ஆனால் அவர்கள் நடைமுறையில் தங்களது பதவிகளை விட்டுக்கொடுக்க முன் வருவதில்லை.

பாராளுமன்றத்தில் அமர்ந்து தூங்குவது பலருக்கும் சுகமாக இருக்கிறது. இதில் பயன் இல்லை. இளைஞர்கள் பொறுப்புக்கு வந்து செயல்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். #Innocent #Parliamentelection
 
Tags:    

Similar News