செய்திகள்

ஒடிசாவில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வட்டியில்லா கடன்- பட்நாயக் அறிவிப்பு

Published On 2019-01-05 10:23 GMT   |   Update On 2019-01-05 10:23 GMT
ஒடிசா மாநிலத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வட்டியில்லா கடன் வழங்கப்படும் என முதல்வர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார். #Patnaik #SelfHelpGroups
பூரி:

ஒடிசா மாநிலம் பூரி நகரில் இன்று ‘மிசன் சக்தி’ என்ற பெயரில் பெண்கள் மாநாடு நடைபெற்றது. இதில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்திருந்த சுமார் 50 ஆயிரம் பெண்கள் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் பேசிய முதலமைச்சர் நவீன் பட்நாயக், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.3 லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படும் என்று அறிவித்தார்.

வட்டியில்லா கடன் வழங்குவதன் மூலம் மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 70 லட்சம் பெண்கள் பயனடைவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், பெண்களுக்கு அதிகாரமளிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு தலா 3000 ரூபாய் நிதி உதவியையும் அவர் வழங்கினார். 

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற ‘மேக் இன் ஒடிசா’ கருத்தரங்கில் பேசிய பட்நாயக், மாநிலத்தில் உள்ள 6 லட்சம் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கும் ஸ்மார்ட்போன் வழங்கப்படும் என வாக்குறுதி அளித்தது குறிப்பிடத்தக்கது. #Patnaik #SelfHelpGroups
Tags:    

Similar News