செய்திகள்

கொச்சியில் ரூ.5 கோடி போதை பொருளுடன் சென்னை வியாபாரி கைது

Published On 2018-12-21 05:57 GMT   |   Update On 2018-12-21 05:57 GMT
கொச்சியில் சென்னை வியாபாரியை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து ரூ.5 கோடி மதிப்புள்ள போதை பொருளை பறிமுதல் செய்தனர். #Drugsseized

திருவனந்தபுரம்:

கேரளாவில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது போதை பொருட்களை விற்பனை செய்ய ஒரு கும்பல் முயற்சிப்பதாக போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

போதை பொருள் விற்பனை செய்யும் கும்பலை பிடிக்க போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் வெளி மாநிலங்களில் இருந்து கொச்சி உள்பட மாநிலத்தின் முக்கிய நகரங்களுக்கு வருவோரும் ரகசியமாக கண்காணிக்கப்பட்டனர்.

இதுபோல வியாபார நிமித்தம் கேரளா வருவோரையும், அவர்களின் வாகனங்களையும் போலீசார் சோதனை செய்தனர்.

கொச்சி போதை பொருள் தடுப்புப்பிரிவு உதவி கமி‌ஷனர் விஜி ஜோர்ஜ், சப்-இன்ஸ்பெக்டர் விபின் தலைமையிலான போலீசார் கொச்சி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது அந்த வழியாக வந்த சொகுசு காரை தடுத்து சோதனை நடத்தினர்.

அந்த காரில் ஹாசிஸ் ஆயில் மற்றும் போதை பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. இதனை போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.5 கோடி ஆகும்.

போதை பொருள் கடத்தி வந்த காரில் இருந்த இப்ராகிம் ஷெரீப் (வயது 59) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் கைதான இப்ராகிம் ஷெரீப், சென்னை அண்ணா சாலை பகுதியைச் சேர்ந்தவர் தெரிய வந்தது.

அங்கு துணி வியாபாரம் செய்து வருகிறார். துணிகளை வெளிமாநிலங்களில் விற்பனைக்கு கொண்டு செல்வதுபோல் போதை பொருட்களை மறைத்து எடுத்துச் சென்று விற்பனை செய்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

இப்ராகிம் ஷெரிப்பிடம் கைப்பற்றப்பட்ட போதை பொருட்கள் சிங்கப்பூர், மலேசியா மற்றும் இலங்கையில் இருந்து கடல்மார்க்கமாக கடத்தி வரப்பட்டுள்ளது.

சென்னை, தூத்துக்குடி துறைமுகங்களுக்கு வந்து சேரும் போதை பொருட்களை ஏஜெண்டுகள் மூலம் வாங்கி அதனை பெங்களூர், ஐதராபாத், கொச்சி உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு கார்களில் கடத்திச் சென்று இக்கும்பல் விற்பனை செய்து வந்ததும் போலீசார் விசாரணையில் தெரிய வந்தது.

இந்தியாவுக்கு போதை பொருட்களை அனுப்பி வைக்கும் வெளிநாட்டு கும்பல் யார்? இவர்களுக்கு உதவி செய்யும் உள்ளூர் நபர்கள் யார்? யார்? என்பதை கண்டுபிடிக்க கொச்சி தனிப்படை போலீசார் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

வெளிநாட்டு கும்பல் பற்றிய விவரம் தெரிய வரும் போது மேலும் பல முக்கிய புள்ளிகள் இந்த வழக்கில் சிக்குவார்கள் என்று கேரள போலீசார் தெரிவித்தனர்.  #Drugsseized

Tags:    

Similar News