செய்திகள்

மேகதாது அணை பிரச்சினைக்கு மத்தியில் காவிரி மேலாண்மை ஆணையம் இன்று கூடுகிறது

Published On 2018-12-03 03:10 GMT   |   Update On 2018-12-03 03:10 GMT
மேகதாதுவில் புதிய அணை கட்டுவதற்கான சாத்தியக்கூறு அறிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்திருக்கும் நிலையில், டெல்லியில் இன்று காவிரி மேலாண்மை ஆணையம் கூடுகிறது. #CauveryManagementCommission
புதுடெல்லி:

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்னும் இடத்தில் ரூ.5,912 கோடி செலவில் புதிய அணை கட்ட கர்நாடக அரசு தீவிர முயற்சியில் ஈடுபட்டு உள்ளது. இதற்கான சாத்தியக்கூறு அறிக்கையை மத்திய நீர்வள ஆணையத்திடம் தாக்கல் செய்த கர்நாடக அரசு, அணை கட்டுவதற்கான அனுமதி கோரியது.

இந்த அறிக்கையை ஏற்றுக்கொண்ட மத்திய நீர்வள ஆணையம், இதற்கான விரிவான திட்ட அறிக்கையை தயாரித்து அளிக்குமாறு கடந்த 22-ந் தேதி கர்நாடக நீர்பாசனத்துறைக்கு உத்தரவிட்டது.

இதைத்தொடர்ந்து அதற்கான பணிகளை மாநில அரசு துரிதப்படுத்தி இருக்கிறது. புதிய அணை கட்டுவதில் உறுதியாக இருக்கும் முதல்-மந்திரி குமாரசாமி, இது தொடர்பான தொடர் ஆலோசனைகளில் ஈடுபட்டு உள்ளார்.

தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறப்பதற்கு தொடர்ந்து மறுத்து வரும் கர்நாடக அரசு, திறக்கும் தண்ணீரையும் தடுப்பதற்காக புதிய அணை கட்டும் முயற்சியில் ஈடுபட்டு இருப்பது தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக கர்நாடக அரசுக்கு தமிழக கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.



மேகதாதுவில் அணை கட்டுவதற்கான சாத்தியக்கூறு அறிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்ததை எதிர்த்து பிரதமர் மோடிக்கு தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதினார். மேலும் இந்த அனுமதிக்கு எதிராக தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கும் தொடரப்பட்டு உள்ளது. அவசர வழக்காக தாக்கல் செய்யப்பட்ட இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என தெரிகிறது.

இத்தகைய பரபரப்பான சூழலில் காவிரி மேலாண்மை ஆணையம் டெல்லியில் இன்று (திங்கட்கிழமை) கூடுகிறது. ஆணைய தலைவர் மசூத் உசேன் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்குப்பின் காவிரியில் கர்நாடக அரசு திறந்துவிட்ட நீரின் அளவு, இரு மாநில அணைகளில் உள்ள நீர் இருப்பு விவரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது.

இந்த கூட்டத்தில் தமிழக அரசு சார்பில் பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் எஸ்.கே.பிரபாகர், காவிரி தொழில்நுட்ப பிரிவு தலைவர் சுப்பிரமணியன் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்கின்றனர். மேகதாதுவில் அணை கட்டுவதற்கான சாத்தியக்கூறு அறிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்ததற்கு பிறகு நடைபெறும் முதல் கூட்டம் இது என்பதால், புதிய அணை பிரச்சினையை இன்றைய கூட்டத்தில் எழுப்ப தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இதை ஏற்கனவே தமிழக சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியிருந்த நிலையில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் இன்றைய கூட்டம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. #CauveryManagementCommission
Tags:    

Similar News