செய்திகள்

அசாமில் 5 பேரை படுகொலை செய்தது நாங்கள் அல்ல- உல்பா

Published On 2018-11-02 07:07 GMT   |   Update On 2018-11-02 07:07 GMT
அசாமில் 5 பேர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தங்களுக்கு தொடர்பு இல்லை என உல்பா அமைப்பு கூறியுள்ளது. #AssamULFAAttack #ULFA
கவுகாத்தி:

அசாம் மாநிலம் தின்சுகியா மாவட்டத்தில் உள்ள கெரோனிபாரி பகுதியில் மர்ம நபர்கள் நேற்று இரவு நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேரும், அருகிலுள்ள வீட்டை சேர்ந்த 2 பேர் என மொத்தம் 5 பேர் பலியாகினர். 2 பேர் காயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு அசாம் முதல்வர் சர்பானந்த சோனோவால்,  மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் பல்வேறு தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்த தாக்குதலைக் கண்டித்து அனைத்து அசாம் பெங்காலி கூட்டமைப்பு சார்பில் இன்று தின்சுகியா மாவட்டத்தில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது. இதனால் வாகன நடமாட்டம் இன்றி சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. மேற்கு வங்காளத்தின் வடக்கு மற்றும் தெற்கு பகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்ட பேரணிகள் நடத்தப்படுகின்றன.

இதற்கிடையே தாக்குதல் நடத்திய குற்றவாளிகளைப் பிடிக்க போலீசார் பல்வேறு குழுக்களாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த தாக்குதலை உல்பா பயங்கரவாதிகள் நடத்தியிருக்கலாம் என காவல்துறை சந்தேகித்தது. ஆனால் இதனை உல்பா அமைப்பு மறுத்துள்ளது. நேற்று நடந்த தாக்குதலுக்கும் தங்கள் அமைப்புக்கும் எந்த தொடர்பும் இல்லை என உல்பா செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார். #AssamULFAAttack #ULFA
Tags:    

Similar News