செய்திகள்

தாயின் கருப்பையில் குழந்தை பெற்றெடுத்த மகள் - மாற்று அறுவை சிகிச்சை முறையில் சாதனை

Published On 2018-10-19 13:31 GMT   |   Update On 2018-10-19 13:31 GMT
குஜராத் மாநிலத்தில் கருப்பை மாற்று அறுவை சிகிச்சை மூலம் தனது தாயின் கருப்பை பயன்படுத்தி பெண் ஒருவர் குழந்தை பெற்றெடுத்துள்ளார்.
அகமதாபாத்:

குஜராத்தைச் சேர்ந்த மீனாட்சி என்ற இளம் பெண் நீண்ட வருடங்களாகக் குழந்தை இல்லாமல் தவித்து வந்துள்ளார். மூன்று முறை கருச்சிதைவு, மேலும் ஒரு முறை குழந்தை இறந்தே பிறந்துள்ளது. இனிமேல் மீனாட்சிக்கு குழந்தை பிறக்க வாய்ப்பில்லை என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இதனையடுத்து, மீனாட்சியின் தாய் அவருக்குக் கருப்பையைத் தானமாக வழங்க முன்வந்ததை அடுத்து கடந்த வருடம் மே மாதம் மீனாட்சிக்கு கருப்பை மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றது. மீனாட்சி உடல் நிலை சற்று தேறிய பிறகு இந்த வருடம் ஏப்ரல் மாதம் இவருக்கு கருத்தரிப்பு சிகிச்சை செய்யப்பட்டது.

இந்த நிலையில், நேற்று புனேவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் மீனாட்சிக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. மீனாட்சிக்குப் பிறந்த குழந்தை 1450 கிராம் எடையுடன் மிகவும் ஆரோக்கியமாக உள்ளதாகவும் தாய், குழந்தை இருவரும் நலமுடன் உள்ளனர் என்றும் அவர்களைக் கண்காணிக்கும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன்மூலம், ஆசியாவிலேயே கருப்பை மாற்று அறுவை சிகிச்சை மூலம் இந்தியாவிலேயே முதல் குழந்தை பிறந்துள்ளது. 
Tags:    

Similar News