செய்திகள்
சபரிமலை சன்னிதானத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட கோவில் அர்ச்சகர்கள்

சபரிமலை போராட்டம் - மூன்று மாநில தலைமைச் செயலாளர்களுக்கு உள்துறை அவசர கடிதம்

Published On 2018-10-19 08:00 GMT   |   Update On 2018-10-19 08:00 GMT
சபரிமலையில் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்கும்படி மூன்று மாநில தலைமைச் செயலாளர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதி உள்ளது. #SabarimalaProtests #Sannidhanam #HomeMinistry
புதுடெல்லி:

சபரிமலை தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பு, கேரள மாநிலத்தில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பிட்ட வயது பெண்களை கோவிலுக்குள் அனுமதிக்கக்கூடாது என்றும், உச்ச நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் என்றும் இந்து அமைப்புகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். குறிப்பாக பெண்களும் இப்போராட்டத்தில் அதிக அளவில் பங்கேற்றனர்.

ஐப்பசி மாத சிறப்பு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டதும் போராட்டம் மேலும் தீவிரமடைந்துள்ளது. கோவிலுக்கு செல்ல முயன்ற பெண்களை போராட்டக் குழுவினர் தடுத்து வருவதால் பதற்றம் நீடிக்கிறது. சில இடங்களில் வன்முறை ஏற்பட்டதால், போலீசார் தடியடி நடத்தினர். போராட்டம் நடைபெறும் பாதைகளில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.



இந்நிலையில், சபரிமலை விவகாரம் தொடர்பாக கேரளா, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு தலைமைச் செயலாளர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதி உள்ளது. அதில், சபரிமலையில் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், மாநிலங்களில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்கள் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், தேவைப்பட்டால் சமூக வலைத்தளங்கள் மற்றும் இன்டர்நெட் சேவையை முடக்கி வைக்கவும் அறிவுறுத்தி உள்ளது. #SabarimalaProtests #Sannidhanam #HomeMinistry
Tags:    

Similar News