செய்திகள்

சபரிமலையில் போராட்டம்- கோவிலுக்கு செல்லும் முயற்சியை கைவிட்ட பெண் பத்திரிகையாளர்

Published On 2018-10-18 06:31 GMT   |   Update On 2018-10-18 06:31 GMT
சபரிமலையில் நடைபெறும் போராட்டம் காரணமாக, நியூயார்க் டைம்ஸ் பெண் பத்திரிகையாளர் கோவிலுக்கு செல்லும் முயற்சியில் இருந்து பின்வாங்கினார். #SabarimalaProtests #WomanJournalist
பத்தனம்திட்டா:

சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து, பக்தர்களின் போராட்டம் தொடர்கிறது. கோவிலுக்கு செல்லும் வாகனங்களை பக்தர்கள் சோதனையிட்டு, 10 வயது முதல் 50 வயது வரையுள்ள பெண்களை தடுத்து நிறுத்தி வருகின்றனர். இந்த பரபரப்பான சூழ்நிலைக்கு மத்தியில் நேற்று மாலை கோவில் திறக்கப்பட்டது.

அப்போது செய்தி சேகரிக்க சென்ற பெண் பத்திரிக்கையாளர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. மறுபுறம் கோவிலுக்கு செல்ல விரும்பும் பெண்களுக்கு போலீசார் பாதுகாப்பை கொடுக்கும் பணியை மேற்கொண்டனர். போராட்டம் காரணமாக நேற்று தடியடி நடந்தமையால் பதற்றமான நிலை நீடிக்கிறது. அங்கு 144–ன் கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இலவங்கல், நிலக்கல், பம்பை, சன்னிதானம் ஆகிய பகுதிகளில் 22–ம் தேதி வரை 144 அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சபரிமலையில் பெண்கள் வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பக்தர்கள் போராட்டம் நடத்தும் நிலையில், பெண்களை பத்திரமாக அழைத்து செல்லும் பணியில் போலீஸ் தீவிரம் காட்டுகிறது. கோவிலுக்கு வரும் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும் என அவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அதிகரிக்கப்பட்ட நிலையில் நியூயார்க் டைம்ஸ் செய்தியாளர் சுஹாசினி  தன்னுடன் பணியாற்றுபவருடன் பம்பாவில் இருந்து கோவிலுக்கு செல்ல பயணம் மேற்கொண்டார். பம்பாவில் இருந்து பெண் ஒருவர் கோவிலுக்கு செல்வதை பார்த்த பக்தர்கள் அவரை நோக்கி வந்துள்ளனர். அவருடைய பயணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பியுள்ளனர். நிலை மிகவும் மோசம் அடையவும் அப்பகுதியில் போலீசார் குவிந்தனர். சுஹாசினிக்கும் அவருடன் வந்தவருக்கும் பாதுகாப்பை ஏற்படுத்தி கொடுத்தனர்.



போலீஸ் பாதுகாப்புடன் அவர் மேற்கொண்ட பயணத்தை தொடங்கினார். இருப்பினும் பக்தர்கள் போராட்டம் காரணமாக மராகோட்டம் பகுதியில் நிலைமை மோசமானது. மேலும் அதிகமான பக்தர்கள் அவருடைய பாதையை வழிமறித்து போராட்டம் மேற்கொண்டார்கள். இதனையடுத்து நிலையை உணர்ந்துகொண்ட சுஹாசினி தன்னுடைய பயணத்தை தொடராமல் தன்னுடன் வந்தவருடன் கீழே இறங்கிவிட்டார்.

இதனையடுத்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், “பொதுமக்களின் உணர்வுகளை காயப்படுத்த விரும்பவில்லை, எனவே என்னுடைய பயணத்தை பாதியில் விடுகிறேன், பம்பைக்கு திரும்புகிறேன்,” என கூறியுள்ளார். பின்னர் அவர்களை பாதுகாப்பாக போலீஸ் பம்பை அழைத்து சென்றது. #SabarimalaProtests #WomanJournalist
Tags:    

Similar News