செய்திகள்

சபரிமலை தீர்ப்பை எதிர்த்து கேரளாவில் பா.ஜ.க. பிரமாண்ட பேரணி

Published On 2018-10-15 09:34 GMT   |   Update On 2018-10-15 09:34 GMT
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் செல்ல அனுமதி அளித்த தீர்ப்பை எதிர்த்து கேரளாவில் இன்று பா.ஜ.க.வினர் பிரமாண்ட பேரணி நடத்தினர். #SabarimalaVerdict #BJPRally
திருவனந்தபுரம்:

சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோயிலுக்கு 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. இந்நிலையில் இது தொடர்பான பொதுநல மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், சபரிமலை ஐயப்பன் கோயிலும் அனைத்து வயதுடைய பெண்களையும் அனுமதிக்கலாம் என சமீபத்தில் தீர்ப்பு கூறியது.

இந்த தீர்ப்பை எதிர்த்து முறையீடு செய்யப்போவதாக ஐயப்பன் கோயிலுக்கு ஆபரணங்களை அளித்துவரும் பந்தளம் அரண்மனை வட்டாரங்கள் தெரிவித்திருந்தன.

இதேபோல், கேரள மாநிலத்தில் சபரிமலை ஐயப்பன் கோயில், குருவாயூர் கோயில், பத்மநாபசாமி கோயில் உள்ளிட்ட 50 முக்கிய கோயில்களை நிர்வகித்துவரும் திருவிதாங்கூர் தேவசம் (தேவஸ்தானம்) சார்பிலும் இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக தகவல்கள் வெளியாகின.

ஆனால், சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பில் மேல்முறையீடு செய்யப் போவதில்லை என திருவிதாங்கூர் தேவஸ்தானம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்தது.

இந்த தீர்ப்புக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு தரப்பினர் ஆர்ப்பாட்டங்களையும் போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர். அதேவேளையில் சிலர் இந்த தீர்ப்பை ஆதரிக்கின்றனர்.

சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை அமல்படுத்த இயலாதவாறு கேரள சட்டசபையில் அவசர சட்டம் இயற்றப்பட வேண்டும் என்னும் கோரிக்கையும் வலுத்து வருகிறது.

இதற்கிடையில், துலாம் மாத சிறப்பு பூஜைக்காக வரும் 17-ம் தேதி சபரிமலை ஐயப்பன் கோயில் திறக்கப்படவுள்ளதால் இதுதொடர்பான முன்னேற்பாடுகள் பற்றி ஆலோசிப்பதற்காக இந்த கோயிலின் தலைமை நிர்வாகிகள், தந்திரிகள் எனப்படும் தலைமை பூசாரிகள் கூட்டம் நாளை நடைபெறுகிறது. இந்த கூட்டத்தின்போது சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு பற்றியும் விவாதிக்கப்படலாம் என தெரிகிறது.



இந்நிலையில், மத்தியில் ஆளும் பா.ஜ.க. சார்பில் இந்த தீர்ப்பை எதிர்த்து கேரள மாநில சட்டசபையை நோக்கி இன்று மாபெரும் பேரணி நடைபெற்றது.

திருவனந்தபுரம் நகரின் முக்கிய சாலைகள் வழியாக சென்ற இந்த பேரணியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சியினரும் பங்கேற்றனர்.

கேரள மாநில பா.ஜ.க. தலைவர் பி.எஸ்.ஸ்ரீதரன் பிள்ளை தலைமையில் பாராளுமன்ற உறுப்பினரும் நடிகருமான சுரேஷ் கோபி, பாரதிய தர்ம சேனா தலைவர் துஷார் வேலப்பள்ளி உள்ளிட்டோர் இந்த பேரணியில் முன்வரிசையில் அணிவகுத்து சென்றனர்.

பேரணியின்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஸ்ரீதரன் பிள்ளை, இவ்விவகாரத்தில் கேரள மாநில அரசு இன்னும் 24 மணி நேரத்துக்குள் தீர்வு காணாவிட்டால் எங்கள் போராட்டம் வேறு வடிவத்தில் தலைதூக்கும் என எச்சரித்துள்ளார்.  #SabarimalaVerdict #BJPRally
Tags:    

Similar News