செய்திகள்
சபரிமலைக்கு மாலை அணிந்த இளம்பெண் ரேஷ்மா.

கண்ணூரில் ஐயப்பனை தரிசிக்க மாலை அணிந்து விரதம் தொடங்கிய இளம்பெண்கள்

Published On 2018-10-15 05:21 GMT   |   Update On 2018-10-15 05:21 GMT
சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்துள்ள நிலையில் கேரள மாநிலம் கண்ணூரில் ஐயப்பனை தரிசிக்க மாலை அணிந்து இளம்பெண்கள் விரதத்தை தொடங்கினர். #Sabarimala
கொழிஞ்சாம்பாறை:

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் சென்று வழிபடலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு சமீபத்தில் அதிரடி தீர்ப்பை அளித்தது. இதனை பலர் வரவேற்றுள்ளனர்.

ஆனால் கேரள மாநிலத்தில் பெண்களே இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். அரசியல் கட்சியினர் ஐயப்பன் கோவிலுக்குள் இளம்பெண்களை அனுமதிக்க மாட்டோம். கோவிலின் புனிதம் கெட்டுவிடும் என்று ஆட்சேபம் தெரிவித்து வருகிறார்கள். கோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக கேரளம், தமிழ்நாடு மற்றும் இந்தியா முழுவதும் பெண்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் கன்னுபுரம் அய்யத்தோள் என்ற பகுதியை சேர்ந்த ரேஷ்மா (வயது 29), நிசாந்த் (27) பெயர் கூற விரும்பாத மற்றொரு பெண் உள்பட 3 பெண்கள் நேற்று மண்டல விரதத்தை தொடங்கினர். கருப்பு ஆடை அணிந்து 41 நாட்கள் விரதம் இருந்து சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்ல உள்ள பெண்களிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:-



எங்களுக்கு ஐயப்பன் மீது பக்தி அதிகம். கடந்த சில வருடங்களாக 41 நாட்கள் விரதம் இருந்து வீட்டிலேயே ஐயப்பனை வணங்கி பூஜை செய்து முடித்தோம். அனைத்து வயது பெண்களும் ஐயப்பன் கோவிலுக்கு சென்று சாமியை தரிசனம் செய்யலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு மனநிறைவை அளிக்கிறது. ஐயப்பனை நேரில் தரிசிக்க வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்துள்ளது.

ஆண்களை போலவே கடும் விரதம் இருந்து காடுமலை கடந்து சென்று ஐயப்பனை தரிசனம் செய்ய உள்ளது பெரும் மகிழ்ச்சியாக உள்ளது என்று கூறினர்.  #Sabarimala

Tags:    

Similar News