செய்திகள்

துணி பார்சலில் ரூ.200 கோடி போதை பொருள் கடத்திய சென்னை வாலிபர் கைது

Published On 2018-10-08 05:40 GMT   |   Update On 2018-10-08 05:40 GMT
கொச்சியில் இருந்து மலேசியாவுக்கு விமானத்தில் துணி பார்சலில் ரூ.200 கோடி மதிப்புள்ள போதை பொருளை கடத்த முயன்ற சென்னை வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கொழிஞ்சாம்பாறை:

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் கடம்பூரை சேர்ந்தவர் பிரசாந்தகுமார் (வயது 32). இவர் சென்னையில் வசித்து வருகிறார். சென்னையில் இருந்து தனியார் கூரியர் சர்வீஸ் மூலம் கொச்சிக்கு துணி பண்டல்களை பார்சல் செய்தார்.

கொச்சிக்கு பார்சல் சென்றதும் அங்கு வந்து பார்சல்களை பெற்றுக்கொண்ட பிரசாந்தகுமார் அவைகளை மலேசியாவுக்கு அனுப்ப வேறொரு பார்சல் கூரியரை அணுகினார்.

அப்போது பார்சல் ஊழியருக்கு சந்தேகம் ஏற்பட்டது. சென்னையில் இருந்து நேரடியாக மலேசியாவுக்கு பார்சல்களை அனுப்பலாமே? ஏன் சென்னையில் இருந்து இங்கு கொண்டு வந்து, இங்கிருந்து மலேசியாவுக்கு பார்சல்களை அனுப்ப வேண்டும் என்று கேட்டார். அதற்கு பிரசாந்தகுமார் முறையாக பதில் கூறவில்லை.

இதனையடுத்து கூரியர் ஊழியர் எர்ணாகுளம் மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து குறிப்பிட்ட பார்சல்களை பிரித்து பார்த்தபோது ரூ.200 கோடி மதிப்புள்ள 32 கிலோ மெத்தடின் என்ற போதை பொருள் இருந்தது. இதனையடுத்து பிரசாந்தகுமார் தலைமறைவனார். அவரை கேரள போலீசார் தேடி வந்தனர்.

இந்நிலையில் சென்னையில் வைத்து பிரசாந்தகுமாரை கேரள போலீசார் கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட போதை பொருள் குறித்து அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News