செய்திகள்

சிபிஐ அமைப்பில் நிலவும் அதிகார மோதல் - சிறப்பு இயக்குநர் மீது இயக்குநர் பரபரப்பு குற்றச்சாட்டு

Published On 2018-09-22 05:48 GMT   |   Update On 2018-09-22 06:03 GMT
பல்வேறு முக்கிய வழக்குகளில் சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா தலையிடுவதாக சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா புகார் அளித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. #CBI #CVC
புதுடெல்லி:

நாட்டின் முக்கிய விசாரணை அமைப்பான சிபிஐயில் தற்போது அதிகார மோதல்கள் ஏற்பட்டுள்ளது. சிறப்பு இயக்குநராக இருக்கும் ராகேஷ் அஸ்தானா, மல்லையாவின் முறைகேடு, அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் பேர வழக்கு, லாலு பிரசாத் யாதவ் தொடர்புடைய ஐஆர்சிடிசி முறைகேடு வழக்கு ஆகியவற்றை விசாரித்து வருகிறார். 

இதில், லாலு தொடர்பான வழக்கில் சோதனைகளை இயக்குநர் அலோக் வர்மா நிறுத்தியதாக அஸ்தானா முக்கியமாகக் குற்றம்சாட்டியிருந்தார். முதலில் இந்த குற்றச்சாட்டை அவர் மத்திய அரசிடம் தெரிவித்தார். பின்னர் மத்திய அரசு அதனை சிவிசி (மத்திய ஊழல் தடுப்பு ஆணையம்) விசாரிக்க உத்தரவிட்டது. 

இதையடுத்து, கடந்த 11-ஆம் தேதி முதல் 14-ஆம் தேதி வரை இந்த விவகாரம் தொடர்பாக பல்வேறு விவரங்களைக் கேட்டு சிபிஐ-க்கு சிவிசி கடிதம் எழுதியது. சிபிஐ விசாரித்து வரும் வழக்குகளில் 6 வழக்குகளின் விவரத்தை சிவிசி கேட்டுள்ளது. ஆனால், தன் மீதான குற்றச்சாட்டுகளை அலோக் வர்மா திட்டவட்டமாக மறுத்துள்ளார். இயக்குநருக்கும், சிறப்பு இயக்குநருக்கும் இடையே ஓராண்டாக மோதல் போக்கு நீடித்து வருவதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில், விசாரணைகளில் குறுக்கீடு செய்வதாக அலோக் வர்மா மீது அஸ்தானா தெரிவித்துள்ள புகாருக்கு சிபிஐ தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், தன்மீதான குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரங்களை திரட்டி வரும் அதிகாரிகளை மிரட்டவே இதுபோன்ற புகாரை அஸ்தானா தெரிவித்துள்ளதாக விளக்கம் அளித்துள்ளது.

சிபிஐயில் வெடித்துள்ள இந்த அதிகார மோதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News