செய்திகள்

காஷ்மீரில் நகரசபைகளுக்கு 4 கட்டங்களாக தேர்தல் - அக்டோபர் 20-ம் தேதி வாக்கு எண்ணிக்கை

Published On 2018-09-15 14:04 GMT   |   Update On 2018-09-15 14:04 GMT
காஷ்மீர் மாநிலத்தில் உள்ள நகராட்சி அமைப்புகளுக்கு அக்டோபர் 8,10,13,16 தேதிகளில் 4 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என அம்மாநில தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார். #Kashmirlocalbodypolls #KashmirMunicipalElections
ஸ்ரீநகர்:

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கடந்த 2011-ம் ஆண்டு ஏப்ரல்-மே மாதத்தில் நகராட்சி மற்றும் பஞ்சாயத்து தேர்தல்கள் கடைசியாக நடைபெற்றன. இந்த தேர்தல்களில் சுமார் 80 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தன. 

இதைதொடர்ந்து, 2016-ம் ஆண்டில் நடக்க வேண்டிய தேர்தல் அப்போது புர்ஹான் வானி என்னும் பயங்கரவாதியை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்ற பின்னர் ஏற்பட்ட கலவரம், வன்முறை மற்றும் அமைதியின்மையால் ஒத்திவைக்கப்பட்டது.

தற்போது, அங்கு பதற்றம் தணிந்து, இயல்புநிலை திரும்பியுள்ள நிலையில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் வரும் அக்டோபர் முதல் தேதி முதல் ஐந்தாம் தேதிவரை நகராட்சி தேர்தல்களும், நவம்பர் 8-ம் தேதியில் தொடங்கி பஞ்சாயத்து தேர்தல்களும் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது.

காஷ்மீர் மாநிலத்தை இந்தியாவில் இருந்து பிரித்து தனிநாடாக அறிவிக்க வேண்டும் என அங்கு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பிரிவினைவாதிகள் நகராட்சி மற்றும் பஞ்சாயத்து தேர்தல்களை புறக்கணிக்குமாறு பொதுமக்களை வலியுறுத்தியுள்ளனர்.

இதேபோல், தேசிய மாநாட்டு கட்சியின் நிறுவனர் பரூக் அப்துல்லாவும் உள்ளாட்சி தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்தார். உள்ளாட்சி மற்றும் பஞ்சாயத்து தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அம்மாநிலத்தின் முன்னாள் முதல் மந்திரியும், மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவருமான மெகபூபா முப்தியும் அறிவித்துள்ளார்.

இந்நிலையில், காஷ்மீர் மாநிலத்தில் உள்ள நகராட்சி அமைப்புகளுக்கு அக்டோபர் 8,10,13,16 தேதிகளில் 4 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என அம்மாநில தலைமை தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார்.

மேற்கண்ட நாட்களில் காலை 7 மணியில் இருந்து பிற்பகல் 2 மணிவரை வாக்குப்பதிவு நடைபெறும். 4 கட்ட வாக்குப்பதிவும் முடிந்த பின்னர் அக்டோபர் 20-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என ஜம்மு-காஷ்மீர் மாநில தலைமை தேர்தல் அதிகாரி ஷலீன் காப்ரா இன்றிரவு தெரிவித்துள்ளார். #Kashmirlocalbodypolls #KashmirMunicipalElections
Tags:    

Similar News