செய்திகள்

கோவாவில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் - காங்கிரஸ் வலியுறுத்தல்

Published On 2018-09-03 10:03 GMT   |   Update On 2018-09-03 10:03 GMT
கோவா மாநில முதல்வர் செயல்படாத நிலையில் இருப்பதால் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது. #ManoharParrikar #GoaCongress
பனாஜி:

கோவா மாநில முதல்வர் மனோகர் பாரிக்கர் உடல்நலக்குறைவு காரணமாக தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதால் அரசு நிகழ்ச்சிகள் எதிலும் கலந்துகொள்ளவில்லை. அமெரிக்காவிற்கு இரண்டு முறை சென்று சிகிச்சை பெற்று வந்த அவர் நாடு திரும்பியபிறகு மீண்டும் உடல்நிலை பாதிக்கப்பட்டது. மறுநாளே மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மருத்துவர்களின் ஆலோசனையின்படி கடந்த வியாழக்கிழமை மீண்டும் மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு சென்றார். வரும் 8-ம் தேதி நாடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.



இவ்வாறு தொடர்ந்து மருத்துவ சிகிச்சையில் இருப்பதால் அவரது பணிகள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், முதல்வர் தொடர்ந்து பொறுப்பில் இல்லாததால் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்றும் காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி உள்ளது.

இதுபற்றி கோவா மாநில காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ராமகாந்த் காலப் கூறுகையில், “கோவா மாநிலம் தற்போது அரசியலமைப்பு நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. எனவே ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தும்படி வலியுறுத்துவதற்காக, கவர்னரை சந்திக்க நேரம் கேட்டுள்ளோம்.

உடல்நிலை பாதிக்கப்பட்டிருப்பதால் முதல்வர் பாரிக்கர் தனது அலுவலகத்திற்கு வராமல் உள்ளார். அவரது பொறுப்புகளை வேறு யாரிடமும் கொடுக்கப்படவில்லை. மேலும் அமைச்சர்கள் பாண்டுரங்க மட்காய்கர், பிரான்சிஸ் டிசோசா ஆகியோரும் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளனர். முதல்வரும் அமைச்சர்களும் எப்போது வருவார்கள் என்ற தகவல்கள் ஏதுமில்லை. மாநிலம் அரசியலமைப்பு நெருக்கடியை எதிர்கொண்டிருப்பதால் இந்த விஷயத்தில் கவர்னர் தலையிடவேண்டும்’ என்றார். #ManoharParrikar #GoaCongress

Tags:    

Similar News