செய்திகள்

ஜெயின் துறவி தருண் சாகர் மறைவுக்கு ஜனாதிபதி - பிரதமர் இரங்கல்

Published On 2018-09-01 06:42 GMT   |   Update On 2018-09-01 06:42 GMT
ஜெயின் துறவி தருண் சாகர் மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். #TarunSagar #JainMonk
புதுடெல்லி:

ஜெயின் துறவியான தருண் சாகர் (வயது 51) இன்று காலை டெல்லியில் காலமானார். கிழக்கு டெல்லியின் கிருஷ்ணா நகர் பகுதியில் உள்ள ராதாபுரி ஜெயின் கோவிலில் இன்று அதிகாலை 3 மணியளவில் துறவி தருண் சாகரின் உயிர் பிரிந்தது. அவரது மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.



ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‘துறவி தருண் சாகர் மறைவு குறித்து அறிந்து கவலை அடைந்தேன். அவர் சமுதாயத்தில் அமைதி மற்றும் அஹிம்சை பற்றிய செய்தியை பரப்பியவர். நன்கு மதிக்கப்படும் ஆன்மீக தலைவரை நாடு இழந்துவிட்டது. அவரது ஆதரவாளர்களுக்கு எனது இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்’ என குறிப்பிட்டுள்ளார்.

‘முனி தருண் சாகர் ஜி மகராஜ்-ன் மறைவு மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தியுள்ளது. அவரது உயர்ந்த சிந்தனைகளுக்கும், சமூகத்திற்கான பங்களிப்பும் என்றென்றும் நினைவில் இருக்கும். அவரது உன்னத போதனைகள் மக்களுக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கும். எனது எண்ணங்கள் ஜெயின் சமூகம் மற்றும் அவரது எண்ணற்ற சீடர்களுடன் என்றும் இருக்கும்’ என பிரதமர் மோடி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

துறவி தருண் சாகர் மறைவுக்கு மத்திய மந்திரிகள் ராஜ்நாத் சிங், சுரேஷ் பிரபு, முக்தார் அப்பாஸ் நக்வி, நிதின் கட்காரி, மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், அரியானா முதல்மந்திரி மனோகர் லால் கட்டார், ராஜஸ்தான் முதல்மந்திரி வசுந்தரா ராஜே, பாஜக தலைவர் அமித் ஷா, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அபிஷேக் சிங்வி உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். #TarunSagar #JainMonk
Tags:    

Similar News