செய்திகள்

பீகார் - காப்பகத்தில் இருந்து மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் மரணம்

Published On 2018-08-31 18:37 GMT   |   Update On 2018-08-31 18:37 GMT
பீகாரில் காப்பகத்தில் இருந்து மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். #BiharShelter
பாட்னா:

பீகார் மாநிலத்தின் தலைநகர் பாட்னாவில் உள்ள நேபாளி நகரில் செயல்பட்டு வருவது ஆஸ்ரா பெண்கள் காப்பகம். இங்கு ஏராளமான பெண்கள் தங்கி வருகின்றனர்.

இதற்கிடையே, அந்த காப்பகத்தில் சுமார் 17 வயது மற்றும் 21 வயது மதிக்கத்தக்க இரு பெண்கள் மர்மமான முறையில் மரணம் அடைந்தனர். இந்த சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து காப்பக உரிமையாளர் சீரந்தான் குமார் மற்றும் காப்பக பாதுகாவலர் ரேணுகா தயாள் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், அங்கிருந்த சில பெண்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், காப்பகத்தில் இருந்து மீட்கப்பட்டு பாட்னா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என டாக்டர்கள் தெரிவித்தனர்.

ஏற்கனவே, முசாபர்பூர் நகரில் தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் அரசு உதவி பெற்று நடத்தப்படும் காப்பகத்தில் தங்கியிருந்த 30-க்கு மேற்பட்ட சிறுமிகளுக்கு மயக்க மருந்து கொடுத்து காப்பக நிர்வாகிகள் மற்றும் பலர் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. #BiharShelter
Tags:    

Similar News