செய்திகள்

கோத்ரா ரெயில் எரிப்பு வழக்கில் மேலும் இருவருக்கு ஆயுள் தண்டனை - 3 பேர் விடுவிப்பு

Published On 2018-08-27 14:17 IST   |   Update On 2018-08-27 14:17:00 IST
குஜராத்தில் கடந்த 2002-ம் ஆண்டு நடந்த கோத்ரா ரெயில் எரிப்பு சம்பவத்தில் 59 கரசேவகர்கள் கொல்லப்பட்ட வழக்கில் இன்று மேலும் இருவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. #Godhra #Godhratrainburning
அகமதாபாத்:

குஜராத் மாநிலத்தின் கோத்ரா ரெயில் நிலையத்தில் கடந்த 27-2-2002 அன்று அயோத்தியில் இருந்து வந்த சபர்மதி எக்ஸ்பிரஸ் ரெயிலின் எஸ்.6 பெட்டி மர்ம நபர்களால் தீ வைத்து எரிக்கப்பட்டது.

இதில் ஏராளமான கரசேவகர்கள் உள்பட 59 பேர் கொல்லப்பட்டனர். இதனால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கலவரம் மூண்டது. இந்த கலவரத்தில் சிறுபான்மையினத்தை சேர்ந்த சுமார் ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர்.



இந்த கலவரத்துக்கு காரணமான கோத்ரா ரெயில் எரிப்பு வழக்கை விசாரித்த சிறப்பு கோர்ட்டு 31 பேருக்கு தண்டனை விதித்து கடந்த 2011-ம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது. இதில் 11 பேருக்கு மரண தண்டனையும், 20 பேருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டது. 63 பேர் இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

இந்த வழக்கில் தண்டனை பெற்றவர்கள் அதை எதிர்த்தும், விடுவிக்கப்பட்டவர்களுக்கு எதிராக மாநில அரசு சார்பிலும் குஜராத் ஐகோர்ட்டில் பின்னர் தனித்தனியாக மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுக்கள் மீதான விசாரணையில் 11 பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

இந்நிலையில், கோத்ரா ரெயில் எரிப்பு தொடர்பாக போலீசாரால் தேடப்பட்ட 13 பேரில் 5 பேர்,  இவ்வழக்கில் கடந்த 2011-ம் ஆண்டு  தீர்ப்பு வழங்கப்பட்ட பின்னர் கடந்த 2015-16-ம் ஆண்டுகளில் வெவ்வேறு இடங்களில் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் மீது அகமதாபாத் நகரில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரணை நடந்து வந்தது. பிடிபட்ட 5 பேரை தவிர மேலும் 8 பேர் இன்னும் தலைமறைவாக உள்ளனர்.

இந்நிலையில், இன்று இவ்வழக்கில் தீர்ப்பளித்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஹெச்.சி. வோரா, குற்றம்சாட்டப்பட்ட 5 பேரில் பரூக் பனா மற்றும் இம்ரான் ஷேரு ஆகியோரை குற்றவாளிகளாக அறிவித்து, ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மீதமுள்ள 3 பேரை வழக்கில் இருந்து விடுவித்தும் உத்தரவிட்டார். #Godhra #Godhratrainburning

Tags:    

Similar News