செய்திகள்

அரியானாவில் மதுவிருந்தில் பங்கேற்ற 150 இளைஞர்கள் சிக்கினர் - போதை மருந்துகள் பறிமுதல்

Published On 2018-08-25 03:52 GMT   |   Update On 2018-08-25 03:52 GMT
அரியானா மாநிலம் சோனிபட்டில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், மது விருந்தில் பங்கேற்ற 150 இளைஞர்களை கைது செய்தனர். #RaveParty
சோனிபட்:

அரியானா மாநிலம் சோனிபட் நகரில் உள்ள ராய் தொழிற்பேட்டை பகுதியில் உரிமம் பெறாமல் மது விருந்து நடப்பதாகவும், அங்கு ஏராளமானோர் போதையில் இருப்பதாகவும் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த இடத்திற்கு போலீசார் சென்று மது விருந்து நடந்த விருந்தினர் இல்லத்தை சுற்றி வளைத்தனர்.

உள்ளே சென்று பார்த்தபோது ஏராளமான இளைஞர்கள் மது போதையில் ஆடிக்கொண்டு இருந்தனர். சிலர் மயக்க நிலைக்கு சென்றிருந்தனர். இதையடுத்து விருந்தில் பங்கேற்ற 8 வெளிநாட்டவர்கள் உள்ளிட்ட 150 இளைஞர்களை போலீசார் பிடித்தனர். அந்த விருந்தினர் இல்லத்தில் இருந்து 215 போதை மாத்திரைகள், 20க்கும் மேற்பட்ட போதை ஊசிகள் மற்றும் மது பாட்டில்கள் கைப்பற்றப்பட்டன.



மதுவிருந்தில் பங்கேற்றவர்களில் பெரும்பாலான இளைஞர்கள் பல்வேறு பல்கலைக்கழகங்களில் படிக்கும் மாணவர்கள் என்பது தெரியவந்தது. மருத்துவ பரிசோதனை மற்றும் விசாரணைக்குப் பிறகு மாணவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

உரிமம் இல்லாமல் மது விருந்து நடத்தியது தொடர்பாக சுங்கத்துறை அதிகாரி உள்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. #RaveParty
Tags:    

Similar News