செய்திகள்

இன்று முதல் சிறை நிரப்பும் போராட்டம் - மராத்தா சமூக அமைப்பு அழைப்பு

Published On 2018-08-01 05:08 GMT   |   Update On 2018-08-01 05:08 GMT
இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி இன்று முதல் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்போவதாக மரத்தா சமூக அமைப்பு அறிவித்துள்ளது. #MarathaReservationProtest #MarathaKrantiMorcha #MarathaQuotaStir
மும்பை:

மகாராஷ்டிர மாநிலத்தில் 30% மக்கள்தொகை கொண்ட மராத்தா சமூகத்தினர், அரசு வேலைவாய்ப்பு மற்றும் கல்வியில் 16% இடஒதுக்கீடு அளிக்க வலியுறுத்தி,  போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த ஆண்டு பிரமாண்ட அமைதி பேரணிகளை நடத்தி நாட்டின் கவனத்தை ஈர்த்தனர். இதில் பலன் கிடைக்காததால் அவர்களது போராட்டம் வன்முறை களமாக மாறியது. கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக ஆங்காங்கே வன்முறை சம்பவங்கள் நடந்து வருகின்றன.

இந்த நிலையில், தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் (புதன்கிழமை) சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக மராத்தா சமூகத்தினர் அறிவித்துள்ளனர்.



மும்பையிலுள்ள ஆசாத் மைதானத்தில், இடஒதுக்கீட்டை வலியுறுத்தியும், கைது செய்யப்பட்டுள்ள மராத்தா சமூகத்தினரை விடுவிக்கக் கோரியும், தடியடி நடத்திய காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், இன்று போராட்டத்தில் ஈடுபடப் போவதாக போராட்டத்தை தலைமை தாங்கி நடத்தி வரும் மராத்தா கிரந்தி மோர்ச்சா அமைப்பு அறிவித்துள்ளது.

இனி முழு அடைப்பு போராட்டம் மற்றும் வன்முறை போராட்டங்கள் நடக்காது என இந்த அமைப்பு கூறியிருந்த நிலையில், தற்போது அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தி கைதாக முடிவு செய்துள்ளது. இந்த போராட்ட அறிவிப்பைத் தொடர்ந்து மும்பை முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லையெனில், வரும் ஆகஸ்டு 9-ஆம் தேதி மும்பையில் மாபெரும் பேரணி ஒன்றை நடத்தப் போவதாகவும் மராத்தா சமூகத்தினர் எச்சரித்துள்ளனர். #MarathaReservationProtest #MarathaKrantiMorcha #MarathaQuotaStir

Tags:    

Similar News